முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
312

கூ

கூடுகின்றார்கள். உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன்தான் போக வேண்டியவனாக இருக்க, அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ. ‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. 1ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே படுவராம். என் நெஞ்சு-அவனை ஒழிந்த வேறு விஷயங்களை உகந்து போந்த நெஞ்சு அன்றோ. இடம் கொண்ட - 2வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே. 3“தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னாநின்றான்.

    ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி. 4திரவியமாக இருக்கச்செய்தேயும் குணங்களைப் போன்று சிலபொருள்கள் சேரக் காணாநின்றோமேயன்றோ. என் நெஞ்சு இடம்கொண்ட வானவர் கொழுந்தே-

_____________________________________________________

1. ஈடுபாட்டுக்கு வேறு ஒரு சம்வாதம் காட்டுகிறார் ‘ஆப்பான் திருவழுந்தூர்
  அரையர்’ என்று தொடங்கி.

2. “கொண்ட” என்றதனால், ‘அவன் வேண்டிப் பெறுகிறான்’ என்பது
   தோற்றாநின்றது என்று கூறத் திருவுள்ளம்பற்றி, இவர் நெஞ்சு
   பெறுகைக்கு அவன் பிரார்த்திக்க வேண்டுமோ? என்ற சங்கையிலே
   அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘வந்தாலும்’ என்று தொடங்கி.

3. அவன் அப்படிப் பிரார்த்தித்த இடம் உண்டோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தேவரீரால்’ என்று தொடங்கி.

  “அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே
   ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்கமுனிவரைப் பார்த்து
  ஸ்ரீராமபிரான் கூறியது.

4. இருவரும் திரவியமாயிருக்கச் செய்தே, திரவிய குணங்கள் போலே சேரக்
  கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘திரவியமாக’ என்று
  தொடங்கி. என்றது, விளக்கு விளக்கின் ஒளி இவற்றினிடத்திலே
  காணாநின்றோமே என்றபடி. ‘சில பொருள்’ என்றது, ஒளியினை. மேலும்,
  ஆத்மாவைக் குறிக்க, சரீரமும் ஞானமும், பரமாத்மாவைக் குறிக்க,
  ஜீவாத்மாவும், திரவியமாக இருக்கச்செய்தே, குணங்களைப் போன்று
  சேர்ந்திருத்தலையும் ஈண்டுக் கோடல் தகும்.