முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
318

517

517

புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலிதண் சிரீவரமங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.


    பொ-ரை :-
பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே! மருத மரங்களின் நடுவே போனவனே! இடபங்கள் ஏழனையும் கொன்ற என் கள்ள மாயவனே! கரிய மாணிக்கத்தின் சுடரே! திருநான்மறைகளிலும் வல்லவர்களான தெளிந்த ஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் நிறைந்து வசிக்கின்ற குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்திற்குள் எழுந்தருளியிருக்கின்ற எந்தையே! எனக்கு உஜ்ஜிவிக்கும் வகையை அருள வேண்டும்.

    வி-கு :-
வல்லார் : முற்றெச்சம். வல்லாராகிய தெள்ளியார் என்க. மலிதல் - மிகுதல். இருந்த: கால மயக்கம்.

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 1“அருஞ்சேற்றில் வீழ்த்திகண்டாய்” என்று அஞ்சுகின்ற உமக்கு நான் செய்ய வேண்டுவது என்? என்ன, சக்தனாய் அண்மையிலிருப்பவனாயிருக்கிற நீ என் விரோதியைப் போக்கி, உன் திருவடிகளிலே கைங்கரியத்தைத் தந்தருள வேணும் என்கிறார்.

    புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த - 2கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார். பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய். என் கள்ள மாயவனே - ஒருவர்க்கும்

____________________________________________________

1. “அருளாய் உய்யுமாறு எனக்கு” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
   அவதாரிகை அருளிச்செய்கிறார். “புள்ளின்வாய் பிளந்தாய்” என்றதனை
   நோக்கிச் ‘சக்தனாய்’ என்றும், “சிரீவரமங்கையுள் இருந்த” என்றதனை
   நோக்கி ‘அண்மையிலிருப்பவனாய்’ என்றும் அருளிச்செய்கிறார்.


2. “புள்ளின்வாய் பிளந்தாய்” என்பது போன்றவைகளைச்
   சக்தியுடையனாந்தன்மைக்கு உறுப்பாக அவதாரிகையில் அருளிச்செய்தார்.
   இங்கு, அவற்றை உபகாரமாக அருளிச்செய்கிறார் ‘கலியர் சோறு இட்ட’
   என்று தொடங்கி.