முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
339

வய

வயிறு பிடிக்க வேண்டி இருக்கை. கிடந்தாய் கண்டேன் - “சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன், நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, 1எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப்பெற்றிலேன் என்றபடி. 2எம்மானே-இது நம்மது’ என்று இராதொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது, சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியாநின்றது என்கிறார் என்னுதல்.

(1)

521

        எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
        எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
        செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
        அம்மா மலர்க்கண் வளர்கின்றானே! என்நான் செய் கேனே?

   
பொ-ரை :- எம்மானே! பரிசுத்தமான சொரூபத்தையுடையவனே! என்னை ஆள்கின்றவனே! எத்தகைய பெருமை பொருந்திய உருவங்களையும் விரும்பும் வகையிலே மேற்கொள்கின்றவனே! அழகிய ஏறே! சிவந்த பெரிய தாமரை மலர்கள் செழுமை பொருந்திய தண்ணீர் மேலே கண்கள் போன்று மலர்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை மூடிக்கொண்டு உறங்குகின்றானே! நான் என் செய்வேன்? என்கிறார்.

    வி-கு :-
மூர்த்தி - ஸ்வபாவம், வடிவுமாம்; ஏறு - இடபம். மிசைக்கண் என்றவிடத்தில் ‘கண்’ இடமுமாம். ‘வளர்கின்றானே’ என்பது, கண்களைத் திறந்து என்னை வினவுதல் செய்யாது உறங்குகின்றானே, என் செய்வேன்! என்கிறார் என்றபடி.

____________________________________________________

1. “கிடந்தாய் கண்டேன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘எழுந்திருத்தல்’ என்று தொடங்கி.

2. “எம்மானே” என்றதற்கு, இரண்டு பாவம் அருளிச்செய்கிறார்.
  ‘சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ’ என்றது, சம்பந்தம்
  இல்லையாகில் ஆறியிருக்கலாம், சம்பந்தமுள்ளதாகையாலே, ‘இப்போதே
  பெற வேண்டும்’ என்னும் மனோவேகத்தைப் பிறப்பியா நின்றது;
  இதனையறிந்து விரைவாக உதவ வேணும் என்கிறார் என்றபடி.