முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
35

452

452

    ஆனான் ஆளுடையான் என்றஃ தேகொண் டுகந்துவந்து
    தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
    மீனாய் ஆமையு மாய் நர சிங்கமு மாய்க்குறளாய்க்
    கானார் ஏனமுமாய்க் கற்கி யாம்இன்னம் கார்வண்ணனே.

   
பொ-ரை :- மீனாகியும் ஆமையுமாகியும் நரசிங்கமுமாகியும் குட்டையனாகியும் காட்டில் வசிக்கும் பன்றியுமாகியும் இன்னம் கற்கியும் ஆகின்ற கார்வண்ணன், என்னை அடிமைகொண்டவன் ஆனான் என்றேன்; என்ற அந்த வார்த்தையை மட்டும் கொண்டு மகிழ்ந்து வந்து தானாகவே இனிய திருவருளைச்செய்து எனக்கு எல்லா உறவு முறையும் தானே ஆனான் என்கிறார்.

    வி-கு :-
‘என்ற அஃதே’ என்பது, ‘என்றவஃதே’ என்று வால் வேண்டும், ‘என்றஃதே’ என வந்தது, தொகுத்தல் விகாரம். வந்து செய்து முற்றவும் ஆனான் என்க. என்னை: வேற்றுமை மயக்கம். எனக்கு என்பது பொருள். மீன் - மச்சம், ஆமை - கூர்மம். குறள் - வாமனம். ஏனம் - வராகம். கற்கி - கற்கி அவதாரம்; கற்கி - குதிரை.

    ஈடு :-
பத்தாம்பாட்டு. 1சர்வேசுவரன் தன் கிருபையாலே ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த மஹோபகாரத்தை நினைத்த க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.

    ஆளுடையான் ஆனான்-என்னை அடிமை கொள்வான் ஆனான் என்று, அறியாதே இங்ஙனே ஒருவார்த்தை சொன்னேன். 2என்ற அஃதே கொண்டு-என்று கூறிய இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு. 3நான் இப்படிச் சொல்லுகைக்குத் தான் செய்த கிருஷி முழுதையும் மறந்தான், 4இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்.

_____________________________________________________

1. மேல் திருப்பாசுரத்தையும் கடாக்ஷித்து, இத்திருப்பாசுரத்தில் முதல் இரண்டு
  அடிகளைத் திருவுள்ளம்பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  கிருதஜ்ஞதை - செய்ந்நன்றியறிதல். பற்றாசு - காரணம்.

2. “ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு” என்று பிரித்துப்
  பதிப்பித்துள்ள முன்னைய பாடம் சரியன்று.

3. “அஃதே” என்ற ஏகாரத்துக்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘நான்
  இப்படிச் சொல்லுகைக்கு’ என்று தொடங்கி. ‘கிருஷி’ என்றது, பின்
  இரண்டு அடிகளில் கூறிய அவதாரங்களைத் திருவுள்ளம்பற்றி.

4. ‘இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்’ என்றது, “கொண்டு”
  என்ற சொல்லுக்குக் கருத்து.