முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
358

    ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1உன்னைக் காண வேண்டும் என்னும் ஆசையாலே இரங்குதற்குரிய செயல்கள் பலவும் செய்த இடத்திலும் காணப்பெற்றிலேன், உன் திருவடிகளை நான் பெறும்படி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

    அழுவன் - குழந்தைகள் செய்வதனையும் செய்யாநின்றேன். 2“மற்றவள்தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ. தொழுவன் - 3வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன். ஆடிக் காண்பன் - ‘இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன். 4‘என்பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. பாடி அலற்றுவன் - காதலால் வழிந்த சொல் பாட்டாய், அதுதானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை. தழு வல் வினையால் - இப்படிப்பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ 5‘உடன் வந்தியான வல்வினை. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே. பக்தியை, பாவம் என்கிறது,

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  மேல் திருப்பாசுரத்தில் “அழுவன் தொழுவன்” என்றவர், “மீண்டும்
  அழுவன் தொழுவன்” என்பது, கூறியது கூறலாகாதோ? எனின், அங்கு,
  காணப்பெறாமையாலே “அழுவன் தொழுவன்” என்றார்; இங்கு, காண
  வேணும் என்று “அழுவன் தொழுவன்” என்கிறார் ஆதலால் குற்றம்
  இன்று.

2. குழந்தைகள் அழுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “மற்றவள் தன்”
  என்று தொடங்கி.

  தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
  விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!
  அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
  அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே.

  என்பது, பெருமாள் திருமொழி. 5 : 1.

3. “அஞ்சலி: பரமா முத்ரா” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  ‘வேதாந்த ஞானமுடையார்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
   கலியர்-பசியர்.

4. “காண்பன்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘என்பட்டால்’ என்று
   தொடங்கி. அறியாரே, ஆகையாலே ‘பார்ப்பன்’ என்கிறார் என்று கூட்டுக.

5. ‘உடன் வந்தியான’ என்றது, போன போன இடமெல்லாம் ஒரு சேர
  வருகிறதான என்றபடி. ‘வல்வினை’ என்றது, ஈண்டு, பக்தியை.