முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
37

தண

தண்ணீரில் சஞ்சரிக்கின்ற சாதியன் ஆனான். ஆமையும் ஆய் - 1எல்லாவற்றையும் தாங்கும் பொருட்டுக் கூர்மத்தின் வடிவையுடையவன் ஆனான். நரசிங்கமும் ஆய் - உடனே விரோதியைப் போக்குகைக்காக இரண்டு வடிவுகளைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான். குறள் ஆய் - கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு இரப்பாளன் ஆனான். கான் ஆர் ஏனமும் ஆய் - 2பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான். 3“ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே, காடு அடங்க மயிற்கழுத்துச் சாயல் ஆக்கும்படியான வடிவையுடையவன் என்பார்

____________________________________________________

  அருமறையார் இருக்கெசுர் சா மத்தி னோடும்
        அதர்வணமா கிய சதுர்வே தங்கள் தம்மைத்
  திருடிஎடுத் துக்கொண்டே உததி சேரும்
        தீயனுக்கா மச்சாவ தார மாய்நீ
  ஒருசெலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கி யேவைத்து
        உக்கிரத்தாற் சோமுகா சுரனைக் கொன்றிட்டு
  இருளறவே விதி படைக்க அவ்வே தத்தை
        இரங்கி அளித் தனைஅரியே! எம்பி ரானே!

  என்றார் பிறரும்.

1. திரிக்கின்ற பொற்குன் றழுந்தாமல் ஆமைத் திருவுருவாய்ப்
  பரிக்கின்ற திற்பெரும் பாரமுண் டேபண்டு நான்மறைநூல்
  விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தந்திரு மேனியின்மேல்
  தரிக்கின் றது மக ரக் கட லாடைத் தராதலமே.

  என்பது, திருவரங்கத்துமாலை. 24.

2. இங்கே,

  “தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும்
   மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
   ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு
   கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்”

  என்ற பரிபாடல் பகுதியையும்,

      ‘இவை கூடும் ஊழி முடிவினுள் ஏழும் ஒன்றாகிய ஆழிக்கண்
  அழுந்துகிற நிலமகளை அழகிய வராகமாகி மருப்பாற் பெயர்த்தெடுத்தோய்’
  என்ற அதன் உரையையும் நினைவு கூர்க.

3. “சோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா
   அத்ருஸ்யத ததாராமோ பாலசந்த்ர இவோதித:”

   என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.