|
New Page 1
பொ-ரை :-
மேகம் போன்ற நிறத்தையுடையவனும், தாமரை போன்ற விசாலமான திருக்கண்களையுடையவனுமான கண்ணபிரானை,
ஏர்களையுடைய வளம்பொருந்திய அழகியனவான வயல்களால் சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ
சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட சீர்களோடும் வண்ணங்களோடும் கூடின தமிழ்ப்பாசுரங்கள் இவை
ஆயிரத்துள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் அமிருதபானம் பண்ணுவாரைப் போன்று விருப்பத்துடன்
சொல்லுகின்றவர்கள், பொலிந்து இறைவன் திருவடிகளை அடைவார்கள் என்றவாறு.
வி-கு :-
கமலத் தடங் கண்ணனாகிய கண்ணபிரான் என்க. கண்ணபிரானைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தமிழ்கள்
என்க. தமிழ்கள்-தமிழ்ப் பாசுரங்கள். இப்பத்தையும் உரைப்பார் பொலிந்து அடிக் கீழ்ப்
புகுவார் என்க. அடிக் கீழ்-திருவடிகளிலே. கீ்ழ்: ஏழாம் வேற்றுமை உருபு. ஆர் வண்ணம்-பருகுகிற
வண்ணம். ஆர்தல் - பருகுதல்; அல்லது, புசித்தல். வண்ணம்-வகை. “பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி”
என்றார் நன்னூலார்.
ஈடு :-
முடிவில், 1இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், தனக்குமேல் ஒன்று இல்லாததான ஸ்ரீ
வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.
கார்வண்ணன் -
காளமேகம் போலே சிரமஹரமான வடிவையுடையவன். கண்ணபிரான் - கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வடிவை
என்னை அநுபவிப்பித்தவன். கமலத்தடங்கண்ணன் தன்னை - 2மலர்ந்த தாமரைத் தடாகம்
போலே குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருக்கண்களையுடையவன். அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய்
இருக்கிறபடி. 3மேலே “நிறமுடை நால்தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம்
செய்த வடிவைக் கூறியபடி. ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சினபோது, சிரமஹரமான
வடிவைக் காட்டித் தன்னை 4முழுக்கக் கொடுத்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி நின்ற
நிலையைத் தெரிவித்தவாறு.
__________________________________________________
1. “உரைப்பார் பொலிந்து
அடிக்கீழ்ப் புகுவார்” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “கமலத்தடம்” என்பதற்கு,
இரு வகையான பொருள் அருளிச் செய்கிறார்.
ஒன்று, மலர்ந்த தாமரைகளையுடைய தடாகம் என்பது. மற்றொன்று,
தடம் -
விரிவு. கமலம் - தாமரை.
3. இப்போது வடிவழகையும்
கண்ணழகையும் அருளிச்செய்வதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘மேலே’ என்று தொடங்கி.
4. ‘முழுக்கக் கொடுத்து’
என்றது, “பிரான்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
|