முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
412

536

536

    காண்பதெஞ் ஞான்றுகொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
    பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகி எங்கும்
    சேண்சினை ஓங்குமரச் செழுங்கா னல்திரு வல்லவாழ்
    மாண்குறள் கோலப் பிரான்மலர்த் தாமரைப் பாதங்களே.


    பொ-ரை :-
கோவைக் கனி போன்ற வாயினையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் வண்டுகளினுடைய பாண்குரலும் இளந்தென்றலுமாக, மிக உயர்ந்திருக்கின்ற கிளைகளையுடைய மரங்கள் நெருங்கியிருக்கின்ற வளப்பம் பொருந்திய கானலையுடைய திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாட்சிமை அமைந்த அழகிய பிரானாகிய வாமனனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளை, வினையேன் காண்பது எந்நாளோ? என்கிறாள்.

    வி-கு :-
மடவீர்! மலர்த்தாமரைப் பாதங்கள் வினையேன் காண்பது எஞ்ஞான்றுகொலோ? என்க. பண் என்பது, பாண் என வந்தது, விகாரம். பாண் - இசை. எங்கும் வண்டின் குரலும் பசுந்தென்றலுமாக, மரம் ஓங்கு செழுங்கானல் என்க. சேண் ஓங்கு சினைமரம் என்க. அன்றி, சேண் என்பதனைச் சினைக்கும், ஓங்கு என்பதனை மரத்திற்கும் அடை ஆக்கலுமாம். கானல்-கடற்கரைச்சோலை.

    ஈடு :-
ஆறாம் பாட்டு. 1திருவல்லவாழிலே நின்றருளின ஸ்ரீ வாமனனுடைய இனிமையையுடையதான திருவடிகளை நான் காண்பது என்றோ? என்கிறாள்.

    வினையேன் காண்பது எஞ்ஞான்று கொலோ- 2குழந்தைகள் செய்தபடி செய்ய, நான் முன்னம் என் பசி தீர்த்துக்கொள்வது என்றோ. உலகநடைக்கு ஒத்ததல்லாத பாவத்தைச் செய்தேன் என்பாள், தன்னை ‘வினையேன்’ என்கிறாள். என்றது, 3காணாமைக்குப் பாவம்

____________________________________________________

1. “மாண் குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்கள் காண்பது
   எஞ்ஞான்று கொலோ” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
   அருளிச்செய்கிறார்.

2. மேல்திருப்பாசுரத்தில் கண்களின் விடாயைச் சொல்லி, இங்குத் தம்
  விடாயைச் சொல்லுவதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘குழந்தைகள்’
  என்று தொடங்கி. ‘உலக நடைக்கு ஒத்ததல்லாத’ என்றது கழிய
  மிக்கதோர் காதலளாயிருத்தல்.

3. அதனை விவரணம் செய்கிறார் ‘காணாமைக்கு’ என்று தொடங்கி. ‘பாபம்
  பண்ணினார்’ என்றது மஹாபலி போல்வாரை.