முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
43

திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும், திருந்தாதாரை உபேக்ஷித்தும், இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார். 

454

  பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
  நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
  கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
  மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.

   
பொ-ரை :- கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்; ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!

    வி-கு :-
பொலிதல்-நீடு வாழ்தல். உயிர் வல் சாபம் போயிற்று என்க. பூதங்கள்-பாகவதர்கள். உழிதரல்-சஞ்சரித்தல்.

    இத்திருவாய்மொழி, அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

    ஈடு :-
முதற்பாட்டு. 1ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

    பொலிக பொலிக பொலிக - நீடூழி  வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும். “சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும்முறை சொல்லக்கடவதாயிருக்குமேயன்றோ? ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார். ‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, அப்படியே யன்றோ செய்தது,

____________________________________________________

1. “கடல் வண்ணன் பூதங்கள்”, “பொலிக பொலிக பொலிக” என்பனவற்றைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.