முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
477

தாம் சொல்லவேண்டா என்றபடி. நொடிதல்-சொல்லுதல். என்நெஞ்சம் நின்தனக்கே கரைந்துஉகும் - 1மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன், இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன், என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.

    கொடிய வல்வினையேன் - 2“எவனுடைய திருநாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ” என்கிறபடியே, திருநாம சங்கீர்த்தனம் மஹாபாதகங்களையும் போக்கும் என்று சொல்லாநிற்க, அதுதானே நிலைகுலைவதற்குக் காரணமாம்படி மஹாபாவத்தைச் செய்தேன். உன்னை என்று கொல் கூடுவதே - நான் தரித்துநின்று உன்னை அநுபவிப்பது என்றோ? அநுபவிப்பதற்கு வந்து கிட்டுவது என்றோ?

(9)

551

    கூடிநீரைக் கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
    வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
    ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடு கின்ற நின்தனை
    நாடும் வண்ணம்சொல்லாய் நச்சுநா கணையானே!


    பொ-ரை :-
தேவர்கள் என்ன, அசுரர்கள் என்ன, இவர்களோடுகூடித் திருப்பாற்கடலைக் கடைந்த விதமும், அதினின்றும் தோன்றிய அமுதத்தைத் தேவர்களே உண்ணும்படி அசுரர்கள் அதனை விடக்கூடிய காரியங்களையே செய்துபோன ஆச்சரியமும் என் சரீரத்திற்குள் நுழைந்து என் உயிரை உருக்கி உண்டிடுகின்றின; நச்சு நாகணையானே! உன்னை அறியும் தன்மையைச் சொல்லாய்.

    வி-கு :-
விடு என்பது, வீடு என நீண்டது; நீட்டல் விகாரம். வீடும் வண்ணம் - அழியும்படி என்றுமாம். வித்தகம் - ஆச்சரியம். நச்சு - நஞ்சு.

____________________________________________________

1. “நின்தனக்கே” என்ற ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘மஹாபலியைப் போலே’ என்று தொடங்கி.

2. திருநாமத்தைக் கேட்டு உருகுதல் பாபத்தின் பலமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘எவனுடைய’ என்று தொடங்கி.

  “யந்நாம ஸங்கீர்த்தநதோ மஹாபயாத் விமோக்ஷமாப்நோதி”

 
என்பது, விஷ்ணு தர்மம்.