முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
63

வியுங்கோள் என்னுதல்; அந்தச் சத்துவ குணத்திலே நிலை நின்ற பெரியோர்களைப் போன்று நீங்களும் வேறு ஒரு பயனைக் கருதாதவர்களாய்ச் சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.

(8)

462

    மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
    நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
    பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
    மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.


    பொ-ரை :-
வேதங்களிலேயுள்ள பரிசுத்தமான ஸ்ரீ புருஷ சூக்தங்களை நாக்கினாலே உச்சரித்துக்கொண்டு, பக்தி மார்க்கத்தினின்றும் வழுவாமல், பூவும் புகையும் விளக்கும் சாந்தமும் தண்ணீரும் ஆகிய இவற்றாலே நிறைந்தவர்களாய்க்கொண்டு பொருந்தி, அடியார்களை நழுவ விடாதவனான சர்வேச்வரனைத் தொழுகின்ற அடியார்களாலும் பகவர்களாலும் உலகமானது நிறைந்திருக்கின்றது; ஆதலால், நீங்கள் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.

    வி-கு :-
உலகு அடியாரும் பகவரும் மிக்கது; நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை. “பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்று அழுதநம் கண்ணினீர்கள்” (சிந். 1391.) என்றவிடத்துக் ‘கள்’ என்பதனை அசைநிலை என்றார் நச்சினார்க்கினியர். மலிந்து - மலிய; எச்சத் திரிபு. அடியார் என்பதற்கு, இல்லறத்தார் என்றும், பகவர் என்பதற்குத் துறவறத்தார் என்றும் பொருள் கூறுவதும் உண்டு.

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 1பகவத்குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டருமான ஸ்ரீ வைஷ்ணவர்கள், பூமி எங்கும் பரந்தார்கள்; நீங்களும் அவர்களோடு ஒக்க வேறு பயன்களைக் கருதாதவர்களாய் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

______________________________________________________

1. ‘பகவத் குணநிஷ்டரும்’ என்றது, “பகவரும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி,
  ‘பகவத் குண நிஷ்டர்’ என்றது, ஸ்ரீ பரதாழ்வானைப் போன்றவர்களை.
  ‘கைங்கரிய நிஷ்டரும்’ என்றது, “அடியாரும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
  ‘கைங்கர்ய நிஷ்டர்’ என்றது, இளையபெருமாளைப் போல்வாரை என்க.