|
463
463
மிக்க உலகுகள் தோறும்
மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு
அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர்
குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில்
கலியுகம் ஒன்றும் இலையே.
பொ-ரை :- சிவனும் பிரமனும் இந்திரனும் முதலாகத் திரண்ட
அமரர் கூட்டங்கள் கண்ணபிரானுடைய விக்கிரஹத்தைப் பொருந்திப் பற்றிக்கொண்டு மிக்க உலகங்கள்தோறும்
எல்லாவிடங்களிலும் பரந்திருக்கின்றன; தொண்டீர்! நீங்களும் அவர்களைப் போன்று தொழுவீர்களேயானால்,
கலியுகத்தின் தோஷங்கள் ஒன்றும் இல்லையேயாம் என்றவாறு.
வி-கு :-
குழாங்கள் மேவிப் பரந்தன என்க. அன்றிக்கே, மேவித் தொக்க அமரர் எனக் கூட்டலுமாம்.
ஈடு :- பத்தாம்
பாட்டு. 1நீங்கள் அடைகின்ற தேவதைகள் செய்கிற இதனை நீங்களும் செய்தீர்கோளாகில்,
யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷங்களும் போம் என்கிறார்.
மிக்க உலகுகள் தோறும்
கண்ணன் திருமூர்த்தி மேவி-பரந்திருக்கின்ற உலகங்கள் எங்கும் கிருஷ்ணனுடைய அசாதாரண விக்கிரஹத்தைப்
பற்றுகோடாகப் பற்றி. நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத் தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன-உருத்திரனோடே பிரஹ்மாவும் இந்திரனும் இவர்கள் தொடக்கமாகத் திரண்ட தேவ
கூட்டங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விரிந்த செல்வத்தையுடையன ஆயின; தொண்டீர் ஒக்கத் தொழகிற்றிராகில்
கலியுகம் ஒன்றும் இலை-வகுத்தது அல்லாத விஷயத்திலே தொண்டு பட்டுத் திரிகிற நீங்கள், அவர்களோடு
ஒக்கச் சர்வேச்வரனை அடைந்து வணங்கப்பெறில், உங்கள் தோஷம் போகையே அன்றிக்கே, யுகம்
காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷமும் போம் என்கிறார்.
(10)
______________________________________________________
1. “நக்கபிரானோடு அயனும்
இந்திரனும் முதலாகத் தொக்க அமரர் குழாங்கள்
கண்ணன் திருமூர்த்தியை மேவி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘நீங்கள்
அடைகிற தேவதைகள்’ என்று தொடங்கியும், “ஒக்கத் தொழகிற்றிராகில்”
என்றதனை நோக்கி
‘நீங்களும் செய்தீர் கோளாகில்’ என்றும், “கலியுகம்
ஒன்றும் இல்லையே” என்றதனை நோக்கி
‘யுகம் காரணமாக’ என்று
தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
|