முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
73

யாலே இருவர்க்கும் 1ஆற்றாமை விஞ்சி, ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க, இரண்டு தலையையும் அழித்தாகிலும் பெறப் பார்ப்பது.

    2
மடல் ஊர்தல் என்பதுதான், தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி, வைத்த கண் வாங்காதே அவ்வுருவைப் பார்த்துக்கொண்டு பனைமடலைக் குதிரையாகக் கொண்டு, தலைவியைப் பிரிந்த போது தொடங்கிக் கண்ட போக உபகரணங்கள் எல்லாம் நெருப்பினாலே கல்பிக்கப்பட்டதாகத் தோற்ற, ஊணும் உறக்கமும் இன்றிக்கே, உடம்பிலே துளிநீரும் ஏறிட்டுக் கொள்ளாதே, தலைமயிரை விரித்துக்கொண்டு திரியா நின்றால், இத்தீயச்செயலைக் கண்ட அரசர் முதலானோர் ‘கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத்துணை அன்பு இருப்பதே!’ என்று அவர்கள் அவனை அத்தலைவியோடு கூட்டக் கூடுதல், இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையிலுள்ள3 உறவினர்களும் கைவிட, அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல், தலைவியானவள் குணங்களால் சிறந்தவளாயிருப்பாளேயாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லையாகில், முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.

    இது தன்னை, 4“கடலன்ன காமத்த ராகிலும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்” என்று உயிரின் அளவல்லாத

_____________________________________________________

1. ஆற்றாமை விஞ்சுதல் இரண்டு தலைக்கும் ஒக்குமாயினும், செல்லாமை
  ஒருதலைக்கே விஞ்சி இருக்கும் என்று கொள்க.

2. இங்கு, கலித்தொகை நெய்தற்கலியில் 21 முதல் 24 முடியவுள்ள நான்கு
  செய்யுள்களையும், அவற்றின் உரைகளையும் படித்து அறிதல் தகும்.

3. ‘உறவினர்களும் கைவிட’ என்றது, இவள் எங்கள் வார்த்தையைக்
  கடவாதிருக்க வேண்டியிருக்கத் தானாகவே சில செயல்களைச் செய்யா
  நின்றாள்; இது நம் குடிக்குச் சேராது என்று அவர்கள் கைவிடுதலைக்
  குறித்தபடி. அலக்குப் போராவது, சேவகர்கள் ஈட்டிகளை ஒன்றோடு ஒன்று
  எதிர்த்து வைத்தல்.

4. கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
  மடலேறார் மைந்தர்மேல் என்ப - மடலூர்தல்
  காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
  வேட்டமா மேற்கொண்ட போழ்து

  என்பது, நச்சினார்க்கினியர் மேற்கோள். (தொல். பொருள்).