New Page 1
முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம்பண்ணி, மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை
அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார். இங்கு, “போகுநம்பி” என்று தள்ளச்செய்தேயும்
கால்வாங்கமாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து, அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார்.
இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச்செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில், மயர்வற மதிநலம்
அருளப்பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!1
575.
நல்குரவும்
செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும்
நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும்
பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம்
மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
பொ-ரை :-
வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும்
அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற
மக்களையுடைய திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
வி-கு :-
ஆகி
ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம்,
உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது.
2செல்வு - செல்வம்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.
இத்திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
1. “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும்நீ
அனைத்தும்நீ அனைத்தினுட் பொருளும்நீ”
என்ற பரிபாடற்
பகுதி ஒப்பு நோக்கத் தகும்.
(பரி. 3.)
2. “செல்வை யாயின் செல்வை யாகுவை”
என்பது,
புறம். செ. 70.
“செல்வாய் செல்வம் தருவாய் நீயே”
என்பது,
தேவாரம்.
|