முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
164

577


577

 

        நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
         2
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
        சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
        புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.

    பொ-ரை :-
நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி, நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய ஒளிபொருந்திய கீர்த்தியேயல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.

    வி-கு :-
ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் - ஒளி.

   
ஈடு :- மூன்றாம்பாட்டு. 2திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாணகுணங்களை ஒழிய ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.

    நகரமும் நாடுகளும் - 3போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார், பயிர்த்தொழில் செய்துகொண்டு தேகயாத்திரையை நடத்திக்கொண்டிருக்கும் நாட்டிலேயுள்ளார். அன்றிக்கே, அளவிற்கு உட்பட்டனவாயுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவாயுள்ளவையும் என்னலுமாம். ஞானமும் மூடமுமாய் - பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக்கடவதான ஞானமும், அதனை மாறுபாடாக எண்ணக்கூடியதான அறியாமையும். நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் - உபமானம் இல்லாததாய்க்

 

 

1. “இருளே வெளியே இகபர மாகி இருந்தவனே”

  என்பது, திருவாசகம். (நீத்தல் விண். 17.)

2. “திருவிண்ணகர் சேர்ந்தபிரான் புகர்கொள் கீர்த்தியல்லால் இல்லை
  யாவர்க்கும் புண்ணியமே” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். மேல் பாசுரத்தில், “நன்னகர்” என்றதனால்
  பிராப்யத்வமும், இப்பாசுரத்தில், “யாவர்க்கும் புண்ணியம்” என்றதனால்
  பிராபகத்வமும் சொல்லப்படுகிறது.

3. மாறுபட்டுள்ள செல்வங்களைச் சொல்லுகிற இடத்திலே “நகரமும் நாடும்”
  என்கிறார்; இவற்றிற்கு மாறுபாடு யாது? என்ன அதற்கு இரண்டுவகையில்
  விடை அருளிச்செய்கிறார் ‘போகமே’ என்று தொடங்கியும், ‘அன்றிக்கே’
  என்று தொடங்கியும்.