New Page 1
சோலைகண்டீர்.
பெரும்தேவுடைமூஉலகே - ஈசுவர அபிமானிகளான
தேவர்களையுடைத்தான மூன்று உலகங்களும். 1இத்தால், என் சொல்லியவாறோ? எனின்,
சோலையானது தனக்கு வேண்டும் பாதுகாவலை அறிவிக்கமாட்டாது அன்றோ; நின்ற இடத்தே நின்று
வாடிக் காட்டுகையும், பின்னர், வைத்து ஆக்கினவனே அதற்கு வேண்டும் காவலைச் செய்யவேண்டுகையும்
முதலாயினவற்றை யுடைத்தாயிருக்கையாய் இருக்குமன்றோ. அப்படியே, நியமிக்கின்றவர்கள் நியமிக்கப்படுகின்ற
பொருள்கள் என்னும் வேற்றுமை அற எல்லாம் அவன் புத்தியதீனமாக இருப்பதனைத் தெரிவித்தபடி.
(5)
580.
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ்
மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர்
மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன்
மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.
பொ-ரை :-
மூன்று
உலகங்களையுடையனாயும் அல்லாத பரமபதத்தையுடையனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப்பூவில்
வசிக்கின்ற திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும் பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து
தொழுகின்ற திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய
என்னுடைய மனத்தின் கண்ணே நித்தியவாசம் செய்கின்ற மேலான ஒளியுருவன் ஆவான்.
வி-கு :- ஆய், சேர்ந்த பிரான் உறைகின்ற பரஞ்சுடர் என்க. தவ்வை - தமக்கை; மூதேவி.
1. ‘இத்தால்’ என்றது,
“பெய்த காவு” என்றதனால் என்றபடி.
இங்கே,
“வையெயிற் றெய்யா மகளிர் திறமினிப்
பெய்ய உழக்கும் மழைக்கா மற்றைய”
(பரி. 9. 33, 34.)
என்ற பரிபாடற்
பகுதியையும், ‘காவை ஒத்தலாவது, கா தனக்கு
இன்றியமையாத மழையை வருவித்துக் கொள்ளமாட்டாது,
அது தானே
பெய்துழிப் பொலிந்து, வாராதவழியும் ஆமளவும் ஆற்றி, ஆகாத
எல்லைக்கண் இறந்து படுதல்”
என்ற அதன் உரையையும் நோக்கத்தகும்.
|