முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
175

583


583.

    என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
    பொன்னப்பன்1 மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
    மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தஅப்பன்
    தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.

    பொ-ரை :-
எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித்தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப்போன்றவனும் மணியைப் போன்றவனும் முத்தைப்போன்றவனும் என்அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.

    வி-கு :-
எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை - தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.

    ஈடு :-
ஒன்பதாம்பாட்டு. 2எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார். அன்றிக்கே, எனக்கு எல்லாவகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை, ‘அல்லேன்’ என்ன, வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.

    எனக்கு என் அப்பன் ஆய் - எனக்கு அசாதாரணனாய்ச்சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய். 3பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப்போல் அன்றியிலே, தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக்கடவ தமப்பனாய். இகுளாய் - எனக்கு நடந்த செயலைப்பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய். இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது. என்னைப் பெற்றவளாய் - வளர்த்துக் கொள்ளியான தாயைப்

 

1. “முத்தனையானே மணியனையானே முதல்வனே”

  என்பது, திருவாசகம்.

(எண்ணப்பதிகம். 4.)

2. முதல் இரண்டு அடிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  “தந்தனன் தன தாள் நிழலே” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
  இரண்டாவது அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. “எனக்கு” என்ற சொல்லுக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பஞ்சகாலத்திலே’
  என்று தொடங்கி. “பெற்றவள்” என்றதற்குக் கருத்து, ‘வளர்த்துக்
  கொள்ளியான தாயைப்போல் அன்றியே’ என்பது.