முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
187

அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ? அன்றிக்கே, பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது; சீலகுண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.

(1)

587.

    கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டைஒண்கண்
    வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
    மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
    நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.

   
பொ-ரை :- வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும், மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன; ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.

    வி-கு :-
மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து - குழைய; எச்சத்திரிபு. கேயம் - பாட்டு. கழிந்த - கழிகின்றன; காலமயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்தபோது - கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.

    ஈடு :- இரண்டாம் பாட்டு. 1“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்” என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே, திருநாட்டிலேதான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

    கேயம் தீம்குழல் ஊதிற்றும் - 2தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும். கேயம் - பாட்டு. தீம் - இனிமை. இனிமையையுடைய பாட்டு என்றபடி. நிரை மேய்த்ததும் - பெண்களை அழைக்கைக்

 

1. “நேயத்தோடு கழிந்தபோது எனக்கு எவ்வுலகம் நிகர்” என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ஊதுகைக்கு விஷயம் காட்டுகிறார் ‘தான் நினைத்த’ என்று தொடங்கி.


3. “கேயத் தீங்குழல் ஊதிற்றும்” என்றதனையும் கூட்டி, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘பெண்களை’ என்று தொடங்கி.