முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
197

New Page 1

வேறாப் பிளந்து” என்று சொல்லக்கடவதன்றோ. 1வருத்தமில்லாமல் திருவடிகளை நிமிர்க்கச் செய்தேயும், ஓர் இளைஞனுடைய செயலாகையாலே போரப் பொலியச் சொல்லுகிறார். “பேர்ந்தோர் சாடிறச், செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்” என்னக்கடவதன்றோ. தேவக் கோலப் பிரான் - 2மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே. அதிபால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனைபோலே இருக்கிறபடி. தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் - அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் 3உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க்கொண்டு காலம் போக்கப்பெற்றேன். நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன். எனக்கு என் இனி வேண்டுவது - இனி அடையத்தக்கது ஒன்று இல்லை என்கிறார்.

(4)

590

வேண்டித்தேவர் இரக்கவந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டுஅன்று அன்னை புலம்பப் போய்அங்கொர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டுநான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?

   
பொ-ரை :- தேவர்கள் வேண்டி இரக்க வந்து பிறந்ததும், அற்றைய நாளில் செறிந்த இருட்டிலே தாயாகிய தேவகிப்பிராட்டியானவள் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு புலம்ப, அந்நிலையிலே சென்று ஒப்பற்றதான ஆயர்பாடியிலே புக்கதும், கம்சனுடைய ஆட்கள் காணாதபடி வளர்ந்து கம்சன் இறக்கும்படியாக வஞ்சனை செய்ததுமான செயல்களை இப்போது இருந்து சொல்லப்பெற்றேன்; எனக்கு என்ன விரோதம் உளது?

 

1. “சாடியதும்” என்று இதனை மிகுத்துச் சொல்லுவான் என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘வருத்தமில்லாமல்’ என்று தொடங்கி. போரப்
  பொலியச் சொன்னதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பேர்ந்தோர்சாடிற’
  என்று. இது, திருவாய். 5. 10 : 3.

2. “தேவக்கோலம்” என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘மனிதர்களை’
  என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘அதிபால்யத்திலே’
  என்று தொடங்கி.

3. உடைகுலைப்பட்டு - கரையுடைபட்டு; நெஞ்சு நெகிழ்ந்து என்றபடி.
  குலை - கரை.