591
591.
இகல்கொள் புள்ளைப்
பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக்
குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த
மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன்
எனக்கென்ன மனப்பரிப்பே.
பொ-ரை :-
பகைமை கொண்ட பகாசுரன் என்னும் பறவையின்
வாயினைப் பிளந்ததும், திமில்களையுடைய இடபங்கள் ஏழனையும் அழித்ததும், உயர்ந்து ஓங்கித்
தழைத்த குருந்த மரத்தினை முறித்ததும் முதலாக வேறும் இத்தன்மையவான, அகன்ற பூலோகத்தை அளந்த
மாயப் பிரானாகிய என்னப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே பகலும் இரவும் துதிக்கப் பெற்றேன்;
எனக்கு மனத்தின்கண் துக்கம் என்ன இருக்கிறது?
வி-கு :-
இகல்-வலிமையுமாம். மற்றும் பலவாகிய மாயங்கள்
என்க. பரிவு - பரிப்பு - துக்கம்.
ஈடு :- ஆறாம்
பாட்டு 1கிருஷ்ணனுடைய பிரதிகூலர்களின் நிரசன பரம்பரையை அநுபவிக்கப்பெற்ற எனக்கு
ஒரு மனோதுக்கம் இல்லை என்கிறார்.
இகல்கொள்
புள்ளைப் பிளந்ததும் - 2கேவலம் புள் மாத்திரமாய் வந்து தோற்றுகை அன்றிக்கே
போரினை மேற்கொண்டு எதிரிட்ட புள்ளினை அழித்ததும். அசுராவேசத்தோடு வரச்செய்தேயும் ‘பாதிக்க
வருகிறது’ என்று பிறர் அஞ்சாத வடிவு கொண்டு வந்தபடி. பள்ளத்திலே மேயும் பறவை உருக்கொண்டு வந்தது.
இமில் ஏறுகள் செற்றதுவும், திமிலையுடைத்தான இடபங்களைச் செற்றதுவும். உயர் கொள் சோலைக்
குருந்து ஒசித்ததும் - ஓக்கத்தையுடைத்தாய்ச் சோலைசெய்து நின்ற குருந்தமரத்தை முறித்ததும்.
3‘இளைஞராயிருப்பார்க்குக் கவர்ச்சிகரமாயிருக்கும்’ என்று தழைத்து நின்றது;
1. முதல் இரண்டு அடிகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “இகல்கொள்” என்று
விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘கேவலம்’
என்று தொடங்கி. “புள்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார்
‘அசுராவேசத்தோடு’ என்று தொடங்கி. அஞ்சாத வடிவு கொண்டு
வந்ததற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘பள்ளத்தில்’ என்று தொடங்கி. இது
பெரியாழ்வார் திருமொழி, 2. 5 : 4.
3. சோலைசெய்து
நிற்கைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
‘இளைஞராயிருப்பார்க்கு’ என்று தொடங்கி.
|