முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
210

அருளிச்செய்யா நிற்கச்செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர், மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன, 1“சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார். 2அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள். 3“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்” என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார். மால்வண்ணனை - கறுத்த நிறத்தையுடைய சர்வேசுவரனை. மலக்கும் நாவுடையேன் - 4இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன்தான். 5இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலேயன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி. இம் மண்ணின்மிசை மாறு உளதோ - 6பரமபதத்தில் அநுபவம் வாய்புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர். இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.

 

1. ‘சோளேந்திர சிங்கன்’ என்பது, பெருமாளுடைய யானை. உளுக்காக்க
  - இருக்கும்படி. என்றது சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து
  கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.

2. “வலக்கையாழி” என்பது போன்ற அடைமொழிகளால், சங்க சக்கரங்களோடு
  கூடின ஆகாரம் தோற்றுமே ஒழிய, பெருமை தோன்ற வழி இல்லையே?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அறப்பெரியவனுக்கு’ என்று
  தொடங்கி.

3. ‘சோளேந்திர சிங்கனை’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்ததனை
  விவரணம் செய்கிறார் ‘ஒன்றிலும்’ என்று தொடங்கி.

  “அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.

4. இவருடைய சொல்லளவில் சர்வேசுவரன் கலங்குவானோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இவர் வார்த்தையில்’ என்று தொடங்கி.

5. சர்வேசுவரன் கலங்குகைக்குக் காரணம், வியாமோகம் என்று கொண்டு,
  அதற்கு இவரையே திருஷ்டாந்தமாக்கிக்கொண்டு அருளிச்செய்கிறார்
  ‘இவர் கலங்கி’ என்று தொடங்கி.

6. இரண்டு உலகங்களிலும் ஒப்பு இல்லை, என்னாமல், “மண்மிசை மாறு
  இல்லை” என்பான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி. வாய்புகுநீர் - வாயளவு தண்ணீர். என்றது,
  தலைமுடிய உள்ள அநுபவம் என்றபடி. அதற்கே வேறும் ஒரு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஒப்பு உண்டு’ என்று தொடங்கி. “ஆக, மண்ணின்
  மிசை மாறுளதோ” என்றதற்கு, முதல்கருத்து, பரமபதத்தில் அநுபவம்
  உந்மஸ்தகமாய், தரித்திருந்து அநுபவிக்கமுடியாமையாலே அதனைவிட்டு,
  தரித்திருந்து அநுபவிக்கலான இந்த உலகத்தில் எதிர் உளரோ?