602
602.
நோக்கும் பக்கமெல்லாம்
கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல்
வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால்
மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும்
மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!
பொ-ரை :- தாய்மார்களே! இவள், பார்க்கும் இடங்கள்
தோறும் கரும்புகளும் செந்நெலும் உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த தாமிரபரணியின்
வடகரையிலுள்ள திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திவ்வியதேசத்தைப் பார்ப்பாளேயானால் அந்தத்
திசையையே அன்றி வேறு ஒருதிசையையும் பார்த்து அறியாள், கழிகின்ற நாள்தோறும் வாயிலே வைத்துப்
பேசுகின்ற வார்த்தைகளும் நீலமணிபோன்ற நிறத்தையுடைய எம்பெருமானது திருப்பெயர்களேயாகும்.
ஈடு :- ஆறாம்பாட்டு.
1வலிமை இல்லாமையாலே முதலிலே பார்க்கமாட்டாள், பார்த்தாளாகில் மற்று ஓரிடமும்
பாராள் என்கிறாள்.
நோக்கும் பக்கம்
எல்லாம் - 2பார்த்த பார்த்த இடமெல்லாம். “திருப்பொருநல் நோக்கும் பக்கமெல்லாம்”
என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர். கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை - கரும்பும்,
அதனோடே இசலி வளர்கிற செந்நெலும், இரண்டற்கும் நிழல்செய்கின்ற செந்தாமரையும்.
வாய்க்கும் - நிறைந்திருக்கும் என்னுதல்; இட்டன எல்லாம் நூறு கிளைகளாகப் பணைக்கும் என்னுதல்.
தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்=சிரமஹரமான திருப்பொருநல் வடகரையிலேயான
ஐசுவரியத்தையுடைய தொலைவில்லி மங்கலம். நோக்குமேல் அத்திசை அல்லால் மறுநோக்கு இலள் - முதலிலே
நோக்க வலியுடையள் அல்லள்; வருந்திப் பார்த்தாளாகில் அத்திக்கை ஒழிய முகம் எடுத்துப்
பார்க்கிறிலள். வைகல் நாள்தொறும்-கழிகிற நாள்தோறும். வாய்க்கொள் வாசகமும்-
1. “நோக்குமேல் அத்திசை அல்லால்
மறுநோக்கு இலள்” என்றதனைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ஊரிலே பார்த்த பார்த்த
இடம் எல்லாம் என்றபடி. ‘திருப்பொருநல்
நோக்கும் பக்கமெல்லாம்’ என்றது, தாமிரபரணி வெள்ளம் பெருகி ஓடுகின்ற
இடங்கள் எல்லாம் என்றபடி. ‘கூறுவாரும் உளர்’ என்றது, தாமிரபரணிக்கு
அடைமொழியாக்கிக் கூறுவாரும் உளர் என்றபடி.
|