முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
241

வாயாலே சொல்லுகிற சொலவும். மணிவண்ணன் நாமமே - வடிவழகுக்கு வாசகமானவற்றையே சொல்லாநின்றாள். 1குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லாநின்றாள். 2இவள் நிலை எது? நம் நிலை எது? உங்களது சொரூப ஞானம்; இவளது உருவஞானம்.

(6)

603.

அன்னைமீர்! அணி மாமயில் சிறுமானிவள்நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
                                                அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.

   
பொ-ரை :- தாய்மார்களே! அழகிய பெருமைபொருந்திய மயிலையும் இளையமானையும் போன்றவளான இவள், நம்மை விஞ்சித் திருத்தொலைவில்லமங்கலம் என்ற பெயரையல்லாமல் வேறு எந்த வார்த்தையையும் கேட்கின்றாள் இல்லை; முற்பிறவிகளில் செய்த புண்ணியம்தானோ? முகில்வண்ணனான எம்பெருமானுடைய மாயம்தானோ? அறியேன்; அவ் வெம்பெருமானுடைய சின்னங்களும் திருப்பெயர்களும் திருந்த இவள் வாயின ஆயின.

    வி-கு :- கைவலித்தல் - மீறுதல். வாயனகள்: 3கள், அசைநிலை, என்ன - என்னுடைய என்றலுமாம். கேட்க உறாள் என்பது, கேட்குறாள் என வந்தது; விகாரம். கைவலிந்து தொலைவில்லி மங்கலம் என்றல்லால் என்ன வார்த்தையும் கேட்குறாள் என்க.

    ஈடு :- ஏழாம்பாட்டு. 4அவன் சின்னமும் திருநாமமும் இவள் சொல்லப்புக்கவாறே நிறம்பெற்றன என்கிறாள்.

 

1. “மணிவண்ணன் நாமமே” என்ற ஏகாரத்திற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘குணவிஷயமாதல்’ என்று தொடங்கி.

2. “இவள், அன்னைமீர்!” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவள்
  நிலை’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘உங்களது’ என்று
  தொடங்கி.

3. “செய்வனகள் செய்யக்கண்டு” என்பது, தேவாரம்.

(அப்பர்.)

  “கற்றனங்கள் யாமுமுடன் கற்பனகள் எல்லாம்” என்பது,

(சிந்தாமணி. 1795.)

4. “அவன் சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே”
  என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.