முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
251

1இவள

1இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை. 2கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே. 3தோழி, தன்வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள்சொன்ன இனிமை பிறவாமையாலே, ‘அவ்வூர்’ என்கிறாள் காணும். என்தான்! முன்பு சொன்னாளே? என்னில், அது அப்படி இராமையால் அன்றோ ‘அவ்வூர்’ என்கிறது.

(9)

606.

    பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
    என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்றுகூவுமால்
    முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
    சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.

   
பொ-ரை :- இப்படிப் பிறந்திருக்கும் இவள், நப்பின்னைப்பிராட்டி தானோ? பூமிப்பிராட்டிதானோ? பெரிய பிராட்டியார்தானோ? என்ன ஆச்சரியமோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவாநிற்பாள்; முற்பட்டு வந்து அவன் நின்று இருந்து உறையும் திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தலையால் வணங்குவாள்; அந்த ஊரின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இராநின்றாள்.

    வி-கு :- பின்னைகொல் பிறந்திட்டாள், நிலமாமகள்கொல் பிறந்திட்டாள், திருமகள்கொல் பிறந்திட்டாள் எனத்தனித்தனியே கூட்டுக. அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் தொலை வில்லிமங்கலம் என்க.

    ஈடு :- பத்தாம்பாட்டு. 4அவனால் அல்லது செல்லாத இவளுடைய ஈடுபாட்டின் மேம்பாட்டினைக் கண்டு, பிராட்டிமாரிலே ஒருத்தியோ? என்று ஐயப்படுகிறாள்.

    பின்னைகொல் - நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ? நிலமா மகள் கொல் - அங்ஙன் அன்றியே, பூமிப்பிராட்டி பிறந்திட்டாளோ?

 

1. சொல் கற்ற பின்புதானே, திருநாமங் கற்கவேண்டும்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இவள் பேச்சு’ என்று தொடங்கி.

2. தாம் கூறியதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘கோயிலிலுள்ளார்’ என்று
  தொடங்கி. கோயில் - திருவரங்கம் பெரியகோயில்.

3. திருத்தொலைவில்லிமங்கலம் என்னாமல், “அவ்வூர்” என்றது, எற்றிற்கு?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தோழி’ என்று தொடங்கி.

4. பாசுர முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.