முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
260

New Page 1

யுடைத்தாய், நறு நாற்றத்தையுடைத்தான குழலையுடைய என்பெண்பிள்ளை. கொங்கு - தேன், அலர் - பூ, ஏலம் - நறுநாற்றம். 1இவள் மயிர்முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழிநீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்! பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறுபோலே- இழந்தது சங்கே - 2இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக்கடவதனை இவள் இழந்தாள்.

(1)

609.

        சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
        செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
        கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
        மங்கை இழந்தது மாமை நிறமே.

   
பொ-ரை :- சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களையுடையவனுக்கு, சிவந்த கோவைக்கனி போன்ற திருவதரத்தையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.

    வி-கு :- கொங்கு - வாசனையுமாம். மாமை - ஒரு நிறவிசேடமுமாம். இத் திருப்பாசுரத்தில், பஞ்சாயுதங்களையும் ஒருசேர அருளிச்செய்திருத்தல் காண்க.

    ஈடு :-
இரண்டாம் பாட்டு. 3திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் என்கிறாள்.

 

1. இறைவனுக்கு, “மாலுக்கு” என்று தொடங்கி, குணம், செயல், வடிவழகு,
  அவயவசௌந்தர்யம் என்பனவாகப் பலவற்றைச் சொல்லி, இவளுக்கு,
  “ஏலக்குழலி” என்று ஒன்றனைமட்டும் கூறியதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘இவள் மயிர்முடி’ என்று தொடங்கி. ‘பங்களப்படை’
  என்றது, “மாலுக்கு” என்பது போன்றவைகளாற் கூறிய குணம்
  முதலானவற்றை. பங்களப்படை - கூளப்படையான கூட்டுப்படை. ‘தனி
  வீரம் செய்வார்’ என்றது, கொங்கலந் ஏலக் குழலியை. தனிவீரம்
  செய்வாரைப் பங்களப்படைகொண்டு அழிக்குமாறு போலே என்று கூட்டுக.

2. “கொங்கு அலர் ஏலம்” என்று விசேடணங்கட்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இவள் மயிர்முடி’ என்று தொடங்கி.

3. மேல்வரும் திருப்பாசுரங்களில் எல்லாம் ஒவ்வோர் அவதாரங்களைச்
  சொல்லுகையாலே அவற்றிற்குத் தகுதியாக, இத்திருப்பாசுரத்தையும் சென்ற
  திருப்பாசுரத்திற் கூறிய அவதாரத்தோடே சேர்த்து, “சங்கு வில் வாள்”
  என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.