முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
264

1

1“ஸ்ரீஜனக மகாராஜனுடைய புத்திரியான அந்தச் சீதா பிராட்டி’ யாதொருவருக்கு மனைவியாக இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமும் அளவிட முடியாதது” என்று அவனுக்கும் பெருமையைக் கொடுக்கும் பெருமையை அன்றோ இவள் இழந்தது.

(3)

611.

        பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு
        மாடுடை வையம் அளந்த மணாளற்கு
        நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்குஎன்
        பாடுடை அல்குல் இழந்தது பண்பே.

   
பொ-ரை :- பெருமைபொருந்திய பிரமனை உண்டாக்கினவனுக்கு, செல்வம்பொருந்திய பூமியை அளந்த மணவாளனுக்கு, உலகத்தையுடையவர்களான பாண்டவர்களுக்குத் தூதுசென்ற நம்பிக்கு, என்னுடைய, பரப்புப் பொருந்திய அல்குலையுடைய பெண்ணானவள் பண்பினை இழந்தாள்.

    வி-கு :- மணாளன் என்பது, மணவாளன் என்பதன் திரிபு. பாடுடை அல்குல்: அன்மொழித் தொகை.

    ஈடு :-
நான்காம்பாட்டு. 2பிரமனைப் படைத்தவன் என்னும் மேன்மையைப்பாராதே தன்னை அடைந்தவர்களுக்காகத் தூதுசென்ற மஹாகுணத்தையுடையவனுக்கு இவள் நீர்மையை இழந்தாள் என்கிறாள்.

    பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு - 3பதினான்கு உலகங்களையும் படைக்கவல்ல பெருமையையுடைய பிரமனைப் படைத்தவனுக்கு, பீடு - பெருமை. மாடு உடை வையம் அளந்த மணாளற்கு - திருவுலகு அளந்தருளின வஞ்சனை பொருந்திய செயலாலே 4தன்னை எனக்கே யுரியவனாகச் செய்தவனுக்கு.

 

1. வியாக்கியாதாவின் ஈடுபாடு: ‘ஸ்ரீ ஜனகமஹாராஜனுடைய’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

  “அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா
   ந த்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 18.

2. “பீடுடை நான்முகனை” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச் செய்கிறார்.

3. பிரமனுக்குரிய பெருமையினை விளக்குகிறார் ‘பதினான்கு உலகங்களையும்’
  என்று தொடங்கி.

4. ‘தன்னை எனக்கே உரியவனாகச் செய்தவனுக்கு’ என்பது “மணாளன்”
  என்பதன் பொருள்.