முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
297

New Page 1

சொல்லாது இருக்கின்றன என்று இருக்கிறாள் காணும். 1போருங் கொல் என்ற ஐயத்துக்குக் காரணம், பாவியான நான் இருக்கையாலே மீளாது ஒழியவும் கூடுமே, நீங்கள் இருக்கையாலே மீளவும் கூடும் அன்றோ என்ற எண்ணம் என்க. என்றது, பாவமே பிரபலமாய் வாராது ஒழியுமோ? உங்களைப் பார்த்து வருமோ? சொல்லீர் கோள் என்கிறாள் என்றபடி. 2அறிவித்துப் போனாளாகில் ஸ்ரீராமவதாரத்தைப் போலே உலகமாகப் பின்தொடரும் அன்றோ; சுற்றமெலாம் பின்தொடர அன்றோ போயிற்று.                               

(2)

621

        பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
        யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்என்
        பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
        கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?

    பொ-ரை :- பூவையும் பசிய கிளிகளும் பந்தும் தூதையும் அழகிய பூக்கூடையுமாகிய இவை எல்லாவற்றாலும் உண்டாகும் இன்ப முழுதும் திருமால் திருநாமங்களைச் சொல்லுவதனாலே உண்டாகும்படி அவன் திருநாமங்களைச் சொல்லி அதனாலே வாழ்வு பெறுகின்ற என் மகள், குளிர்ந்த வயல்களையுடைய திருக்கோளூர்க்கு இனிச் சென்று, கோவைக்கனி போன்ற வாய் துடிக்கும்படி தண்ணீர் நிறைந்த கண்களோடு நின்று என்ன செய்கிறாளோ? என்கிறாள்.

    வி-கு :- பெண்கள் பந்து விளையாடுதல் மரபு. தூதை - விளையாட்டுக்குரிய சிறிய மரப்பானை, புட்டில் - பூங்கூடை, போய் என்செய்யும்கொலோ? என்க.

    ஈடு :- மூன்றாம்பாட்டு. 3திருக்கோளூர் அண்மையிலிருந்ததாகில் எங்ஙனே உடைகுலைப்படக்கடவள் என்கிறாள்.

 

1. “போருங்கொல்” என்று ஐயப்படுவான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘போருங்கொல்’ என்று தொடங்கி.

2. மகள்தான் அறிவித்துப் போகாது ஒழிவான் என்? என்ன, ‘அறிவித்துப்
  போனாளாகில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

  சுற்றமெலாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே!
  அற்றவர்கட் கருமருந்தே! அயோத்திநகர்க் கதிபதியே!
  கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!
  சிற்றவைதன் சொற்கொண்ட சீராமா! தாலேலோ.

  என்பது பெருமாள் திருமொழி.

3. “கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ’ என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.