முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
368

மலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்துபோன காலம் கடந்திருக்கச்செய்தேயும் மதுவனம் அழிக்கும்போது பிராட்டியைக் கண்டார்களாகவேணும்’ அன்றோ. ‘பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜபுத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

    என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதிரோ - 1என்றும் இவள் குழலில் மதுபானம் செய்வன வண்டுகளே அல்லவோ. 2தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல், இவை யாதல். 3அவனேயோ ஒத்த தரத்தைத் தரவல்லான், நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது, “ஸோஸ்நுதே - அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே, உங்களையும் அவனையும் ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ. என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ - உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியையுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ? மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழியமாட்டாமல் நின்று பறக்கிறபடியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள். 4உங்கள் காரியமும் பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை, கூடிய வண்டினங்காள் - 5மஹாராஜரைப்போலே படைதிரட்ட வேண்டா

 

1. ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘என்றும்’ என்று தொடங்கி.

2. இவள் குழலில் என்றும் மதுபானம் பண்ணுவன வண்டுகளே என்பதனை
  அருளிச்செய்கிறார் ‘தூவியம்புள்ளுடை’ என்று தொடங்கி. இது, திருவாய்.
  9. 9 : 4.

3. ‘தலையான பரிசில்’ என்று மேலே அருளிச்செய்ததனை விவரணம்
  செய்கிறார் ‘அவனேயோ’ என்று தொடங்கி. ‘அவனோடு ஒத்த
  தன்மையை’ என்றது, சமமான போகத்வம். என்றது, அவனுக்குப்
  போக்கியமான குழலை நீங்களும் அநுபவிக்கும்படி செய்கிறேன் என்றபடி.

4. “ஊதீரோ” என்ற ஓகாரத்திற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘உங்கள்
  காரியமும்’ என்று தொடங்கி. உங்கள் காரியம் - அங்கே சென்று
  அறிவித்தல். பிறரைப் பாதுகாப்பது - தேன் குடித்தல்.

5. “கூடிய” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மஹாராஜரை’ என்று
  தொடங்கி.