முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
378

    ஈடு :- ஐந்தாம்பாட்டு. 1தன்னுடைய கிளிகளைக் குறித்து, எங்கேனும் சென்றாலும் அவனைக் கண்டு இதுவோ உம்முடைய தக்கோர்மை இருக்கும்படி என்னுங்கோள் என்கிறாள்.

    நுங்கட்கு யான் உரைக்கேன் - 2யாருக்குச் சொல்லும் வார்த்தையை யாருக்குச் சொல்லுகிறது? 3தனக்கு முன்னே ஆற்றாமையோடே அன்றோ அவைதாம் இருக்கின்றன; 4ஆற்றாமை சொல்லுவியாதது இல்லையன்றோ. நுங்கட்கு யான் உரைக்கேன் - 5உங்களுக்குச் சொல்லுமது அன்று; நான் சொல்லுமது அன்று. வியசனத்துக்கு உரியவர்கள் இருக்க, வேறே சிலர் வார்த்தை சொல்லுமாறு போலே. வம்மின் - 6‘இவளைப் பிழைப்பித்தோமாம் விரகு ஏதோ?’ என்று சிந்திக்கிற உங்களுக்கு ஒரு விரகு சொல்ல வாருங்கோள். யான் வளர்த்த கிளிகாள் - 7என்வயிற்றிலே பிறந்த உங்களுக்கு அவன் பரிகரம்போலே செருக்கு அடித்திருக்கக் காலம் உண்டோ? செருக்கு அடித்திருக்கப் பிறந்தீர்கோளோ!

 

1. “எங்குச் சென்றாகிலும் கண்டு” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “நுங்கட்கு” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘யாருக்குச் சொல்லும்’
  என்று தொடங்கி. என்றது, என் ஆற்றாமையைக் கண்டு என் காரியத்தில்
  ஒருப்படாதிருப்பார்க்குச் சொல்லுமதனை, அதிலே ஒருப்பட்டிருக்கிற
  உங்களுக்குச் சொல்லவேண்டுமோ? என்றபடி.

3. அப்படிச் சொல்லுகைக்கு அவற்றுக்கு ஆற்றாமை உண்டோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தனக்கு முன்னே’ என்று தொடங்கி.

4. ஆனால், சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘ஆற்றாமை’ என்று தொடங்கி.

5. ‘யாருக்குச் சொல்லும் வார்த்தையை யாருக்குச் சொல்லுவது?’ என்று
  மேலே அருளிச்செய்த வாக்கியத்தை அநுவதித்துக்கொண்டு, “யான்
  உரைக்கேன்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘உங்களுக்கு’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘வியசனத்துக்கு’ என்று
  தொடங்கி. ‘சிலர்’ என்றது, சிலர்க்கு என்றபடி.

6. கிளிகள் வியசனத்தை அறிந்திருப்பவை ஆகையாலே சொல்லாமல் தாமே
  காரியம் செய்யுமாகில் “வம்மின்” என்று அழைப்பான் என்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவளை’ என்று தொடங்கி.

7. “யான் வளர்த்த” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘என் வயிற்றிலே’
  என்று தொடங்கி. ‘அவன் பரிகரம்போலே’ என்றது, “வெங்கட்புள்”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி.