New Page 1
பொ-ரை :-
ஒண்கிளியே! ஒன்றோடு ஒன்று மாறுபட்டுப் பூக்களைச் சொரிகின்ற அழகிய சோலைகளாற் சூழப்பட்ட,
செந்நிறம் பொருந்திய கடற்கரையிலுள்ள திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்திலே ஒருவகையாகச்
சென்று புக்கு, கரியநிறத்தையும் சிவந்த திருவாயினையும் சிவந்த திருக்கண்களையும் சிவந்த திருக்கைகளையும்
சிவந்த திருவடிகளையும் போரைச் செய்கின்ற ஒளிபொருந்திய சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும்
சங்கையும் அடையாளமாக நன்கு பார்த்து, நான்சொல்லும் ஒருவார்த்தையைச் சொல்லுவாய் என்கிறாள்.
வி-கு :-
கிளியே! திருவண்வண்டூர் சென்று புக்குத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரை என்க. செரு -
போர்; இங்கே, மாறுபாடு. செக்கர் - செந்நிறம். வேலை-கரை. திருவண்வண்டூர், மேலைக் கடற்கரையிலே
உள்ளது.
ஈடு :-
ஏழாம்பாட்டு. ‘கிளிகள் சிலவற்றைப் பார்த்து, அவன் அடையாளங்களைச் சொல்லி, இவ்வடையாளங்களின்படியே
கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள்.
ஒரு வண்ணம் சென்று
புக்கு - இதற்கு இரண்டுபடியாக அருளிச்செய்வர்கள். இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே,
போர முதலிகளாய் இருப்பர்; மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப்
புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர். அன்றிக்கே, செல்லும் வழி, நெஞ்சினைக்
கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்; அதிலே கால்தாழாதே வருந்தி ஒருபடி சென்று
புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம். 2“பழைய தன்மைகளை அறிந்த
சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து” என்றும், “பொன்னியலும்
மாடக் கவாடம் கடந்து புக்கு” என்றும் கூறுமாறு போலே.
1. “ஒண்கிளியே! கருவண்ணம்
செய்யவாய் செய்யகண்” என்பன
போன்றவற்றைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. இனிமையாலே
கடந்து போக ஒண்ணாமைக்குப் பிரமாணங்கள் மூன்று
காட்டுகிறார் ‘பழைய தன்மைகளை’ என்று தொடங்கி.
“ஸ: ததந்த:புரத்வாரம்
ஸமதீத்ய ஜநாகுலம்
ப்ரவிவிக்தாம்
தத: கக்ஷ்யாம் ஆஜகாம புராணவித்”
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
19 : 1.
“பொன்னியலும்” என்பது, பெரிய திருமடல்.
சுலோகத்தில்
“அதீத்ய” என்னாமல், “ஸமதீத்ய” என்கையாலும்,
|