முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
386

உங

உங்களுக்கு நான் சொல்லிவைத்ததாதல்; ‘இதுவோ தக்கவாறு என்று சொல்லுங்கோள்’ என்றதாதல். சொல்லிச் சென்மின்கள்-1அது வழிக்குப் பாதேயம் காணும். அங்கே போனால் சொல்லப் பார்த்திராமல் போகிறபோதே சொல்லிக்கொடு போங்கோள். தீவினையேன் 2அவை கிடக்கிடுங்கோள்; என்னுடைய பாபம் இருந்தபடி பாருங்கோள்; புத்திரனை விற்கின்றவர்களைப் போன்றவர்கள் ஆனேன். 3அவனும் நானும் கூட இருந்து உங்களைக்கொண்டாடுகை அன்றிக்கே, உங்களைக்கொண்டு காரியம் கொள்ளும்படியான பாவத்தைச் செய்துள்ளேன். வயிற்றிற் பிறந்தாரை இடுவித்துக் காதலனை அழைத்துக் கொள்ளுதலைப் போன்ற புன்மை இல்லையே.

(6)

636.

    பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
    யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
    மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
    பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.

   
பொ-ரை :- பாவைகளே! காயாம்பூவைப்போன்ற திருநிறத்தையுடையவன், செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களையுடையவன், அஃறிணைப் பொருளும் உயர்திணைப்பொருளுமாகி நின்ற மாயவன், என் ஆழிப்பிரான், குதிரைவடிவம்கொண்டு வந்த கேசியினது வலிய வாயினைப் பிளந்த மதுசூதனன் ஆன எம்பெருமானுக்கு நான்சொல்லிய வார்த்தையைச் சொல்லி வினையாட்டியேனுடைய துக்கத்தைத் தீர்க்கின்றீர்களா? என்கிறாள்.

 

1. “சொல்லிச் சென்மின்கள்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அது
  வழிக்கு’ என்று தொடங்கி. பாதேயம் - தோட்கோப்பு. அதற்கே, வேறும்
  ஒரு பாவம் அருளிச்செய்கிறார் ‘அங்கேபோனால்’ என்று தொடங்கி.
  என்றது, அவன் வைலக்ஷண்யங்களைக் கண்டால் வாய் எழாதே
  போகிலும் போம்; ஆதலால், இங்கிருந்துகொண்டே சொல்லிக்கொண்டு
  போங்கோள் என்றபடி.

2. ‘அவை கிடக்கிடுங்கோள்’ என்றது, நீங்கள் அங்கே செல்வது, நான்
  சொன்ன வார்த்தையைச் சொல்லுவது, அவன் வருமது, இவையெல்லாம்
  கிடக்கட்டும் என்றபடி.

3. “தீவினையேன்” என்பதற்கு, வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார்
  ‘அவனும் நானும்’ என்று தொடங்கி. ‘புத்திரனை விற்கின்றவர்களைப்
  போன்றவர்கள் ஆனேன்’ என்ற வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
  ‘வயிற்றிற் பிறந்தாரை’ என்று தொடங்கி.