முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
387

   வி-கு :- பூவை - காயாம்பூ பாவைகள் : அண்மை விளி. பாசறவு-நிறத்தின் பசுமை அழிதல்; துக்கம்.

   ஈடு :-
ஏழாம்பாட்டு. 1‘பரமசேதனன் பொகட்டுப்போனான்; சிறிது அறிவுள்ள பறவைகள் பறந்துபோவனவும் வேறு ஒன்றிலே நோக்குள்ளனவுமாயின; இதற்குக் காரணம், அறிவுள்ளவைகள் ஆகையோ’? என்று பார்த்து, அறிவு இல்லாததான பாவையை இரக்கிறாள். அறிவில்லாத பொருளும்கூட எழுந்திருந்து காரியம் செய்யவேண்டும்படி காணும் இவள்நிலை.

    2
பூவைகள்போல் நிறத்தன்-3ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன். 4“பார்க்கின்ற ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தையும் கவர்கின்றவன்” என்னும்படியே. 5பேற்றுக்குப் பாவையின் காலிலே விழும்படியான வடிவுபடைத்தவன். பூவைப்பூ போன்ற வடிவையுடையவன். புண்டரீகங்கள் போலும் கண்ணன் - 6ஒருபூ ஒருபூவினைப் பூத்தாற்போலே காணும் வடிவும் கண்ணும் இருக்கும்படி; காயாம்பூ தாமரை பூத்தாற்போலே இராநின்றது. 7அறிவுடைப் பொருள் அறிவில்லாப்பொருள் என்ற வேறுபாடு

 

1. மேல் திருப்பாசுரங்களில் எல்லாம் அறிவினையுடைய பறவைகளை
  இரந்தவள், இத்திருப்பாசுரத்தில் அறிவில்லாத பாவையை இரப்பது ஏன்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பரமசேதனன்’ என்று
  தொடங்கி. அறிவில்லாத பொருள் காரியத்தைச் செய்ய மாட்டுமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அறிவில்லாத பொருளும்’
  என்று தொடங்கி. பரமசேதனன் - சர்வேசுவரன்.

2. “மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்
   தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்”

(தொல். பொருள்.)

  என்னும் துறையை இங்கு நினைவு கூர்தல் தகும்.

3. இப்போது வடிவழகினைச் சொல்லுதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘ஆண் பெண்ணாம்படியான’ என்று தொடங்கி.

4. பெண்ணாக்குவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பார்க்கின்ற’ என்று
  தொடங்கி. “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்பது, ஸ்ரீராமா.

5. வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார் ‘பேற்றுக்கு’ என்று தொடங்கி.

6. வடிவிற்கும் கண்ணிற்கும் மலர்களை ஒப்புமை சொல்லுவதற்கு,
  ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘ஒருபூ’ என்று தொடங்கி. அதனை
  விவரணம் செய்கிறார் ‘காயாம்பூ’ என்று தொடங்கி.

7. திருக்கண்களின் அழகினைச் சொல்லுவதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘அறிவுடைப்பொருள்’ என்று தொடங்கி. எல்லாம் தன் காற்கீழே
  விழும்படியான கண்ணழகு படைத்தவன் என்றபடி. அன்றிக்கே, எல்லாப்
  பொருள்களின் காற்கீழே தலைவியாகிய தான் விழவேண்டும்படியான
  கண்ணழகு படைத்தவன் என்னலுமாம்.