முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
428

வியாமோகம் செய்யுமவன். உன்னைக் காண்பான் வருந்தி - 1என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? எனைநாளும் - அநேக காலம். 2மயர்வற மதிநலம் அருளியபின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர்சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி. தீயோடு உடன்சேர் மெழுகாய்-3நெருப்பிலேபட்டுக் கரிந்துபோகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே, உருகுவது வலிப்பது ஆகிறபடி. மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி. 4நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப்பண்ணச் சொல்லுகிறபடி. உலகில் திரிவேனோ - ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப்பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே 5யாதநாசரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!

(6)

647.

        உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
        உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
        அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
        அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.

 

1. பின் இரண்டு அடிகளில் தம்முடைய துயரத்தை அருளிச்செய்வதற்கு,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘என்னளவில்’ என்று தொடங்கி.

2. சிலகாலம்தானே இங்கு எழுந்தருளியிருந்தார்; “எனைநாளும்” என்கிறது
  என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மயர்வற’ என்று
  தொடங்கி. என்றது, பிரிவுத்துன்பத்தால் பலகாலமாகத் தோற்றுகிறது
  என்றபடி.

3. ‘தீயோடுசேர்’ என்னாமல், “உடன்சேர்” என்று விசேடித்ததற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘நெருப்பிலேபட்டு’ என்று தொடங்கி. ‘உருகுவது
  வலிப்பது’ என்றதனை விவரிக்கிறார் ‘மானச அநுபவத்தாலே’ என்று
  தொடங்கி. என்றது, ஒருகுணத்தை அநுபவித்தால், அது வேறு
  குணங்களிலே ஆசையைப் பிறப்பிக்கும்; அப்போதே அந்தக்
  குணங்களை அநுபவிக்கப் பெறாமையாலே உருகுவது; அது
  கிடைத்தவாறே தரிப்பது என்றபடி. புறத்திலே திருமேனியோடு கலவி
  பெறாமையால் உண்டான ஆசையாலே உருகுவது; ‘ஒருகால்
  காணலரமோ’ என்னும் நசையை விளைத்து விக்கிரஹ வைலக்ஷண்யம்
  முடிய ஒட்டாமையாலே வலிப்பது என்றபடி.

4. இதனை விவரணம் செய்கிறார் ‘நசை’ என்று தொடங்கி. நசையாவது,
  கிடைக்குமோ என்னும் சாபலம். ஆசையாவது, அநுபவம் இல்லாத
  காலத்தில் தரியாமை விளைக்கும் அபிநிவேசம்.

5. யாதநாசரீரம் - நரக அநுபதத்திற்குரிய சரீரம்.