முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
43

1

1“எப்பொழுதும் ஒருபடிப்பட்டதான திவ்வியமங்கள விக்கிரஹத்தையுடையவன்” என்று சொல்லளவேயாய்ப் போகையன்றிக்கே, அதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டிருக்கிற வடிவைக் காண்பாய் என்றபடி.

(7)

560.

    திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண்சிறுபூவாய!
    செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ்தண் திருவண்வண்டூர்
    பெருந்தண் தாமரைக்கண் பெருநீண்முடி நாற்றடந்தோள்
    கருந்திண் மாமுகில் போல் திருமேனி அடிகளையே.

    பொ-ரை :- அழகிய சிறிய பூவையே! செருந்தி ஞாழல் மகிழ் புன்னை இவைகளால் சூழப்பட்டுக் குளிர்ந்திருக்கின்ற திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய குளிர்ந்த தாமரைபோன்ற திருக்கண்களையும், பெரிய நீண்ட திருமுடியினையும், விசாலமான நான்கு திருத்தோள்களையும், திண்ணிய கரிய பெரிய மேகம்போன்ற திருமேனியினையுமுடைய சுவாமிகளை நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

    வி-கு :- பூவாய்! அடிகளைத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் என்க. செருந்தி - வாட்கோரை. ஞாழல் - புலிநகக் கொன்றை. மகிழ் - வகுளம். திண்ணிய கரிய முகில் என்க.

    ஈடு :- எட்டாம்பாட்டு. 2பூவைகள் சிலவற்றைக் குறித்து, மீண்டு வந்து எனக்குச் சொல்லலாம்படி நன்றாகக் கண்டு, ஒரு மறுமாற்றம் கேட்டுவந்து சொல்லவேண்டும் என்கிறாள். காணஒண்ணாமைக்கு வேண்டும் காரணங்களைத் திரியவும் சொல்லிவைத்துத் திருந்தக் காணுங்கோள் என்கிறாள் அன்றோ.

 

1. அதனை விவரணம் செய்கிறார் ‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.
  “ஸதைகரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபு. 1. 2 : 1.

2. “திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண்சிறு பூவாய்”
  என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். “திருந்தக்
  கண்டு” என்பதற்கு, மேற் பாசுரத்திற் கூறிய பொருளை இங்கும் கூறாது,
  ‘மீண்டு வந்து எனக்குச் சொல்லலாம்படி நன்றாகக் கண்டு’ என்று
  கூறுவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘காண ஒண்ணாமைக்கு’
  என்று தொடங்கி. காண ஒண்ணாமைக்குரிய காரணங்கள், “பெருந்தண்
  தாமரைக்கண்” என்பது போன்றவைகள். “திருமேனி அடிகளைத் திருந்தக்
  கண்டு” என்று கூட்டுக.