முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
46

New Page 1

யுடைத்தாய், நிலைத்திருப்பதாய் அளவிடற் கரியதான மேகம் போலே இருக்கும் வடிவு என்னுதல். அன்றிக்கே, நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம். கறுத்து அகவாய் திண்ணியதாயிருப்பதொரு மேகம் பெறிலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர். திருமேனி அடிகளையே - 1வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்டபோதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை. அன்றிக்கே, அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச்செய்வர்.

(8)

561.

    அடிகள் கைதொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
    விடிவை சங்கொலிக்கும் திருவண்வண்டூ ருறையும்
    கடிய மாயன்தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
    கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.

   
பொ-ரை :- தாமரைப்பூவின்மேல் தங்கியிருக்கின்ற அன்னங்களே! விடியலைக் குறிக்கின்ற சங்குகள் ஒலிக்கின்ற திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற கடிய மாயனைக் கண்ணனை நெடிய திருமாலைக் கண்டு, அவன் திருவடிகளைக் கைகூப்பி வணங்கி, கொடிய வல்வினையேனாகிய என்னுடைய தன்மையைத் தனியே இருந்துகொண்டு கூறுங்கோள்.

    வி-கு :- அன்னங்காள்! உறையும் மாலைக் கண்டு அடிகள் கைதொழுது வினையேன் திறத்தை வேறுகொண்டு கூறுமின் என்க. விடிவை சங்கு ஒலிக்கும் - விடியற்காலத்தைக் குறிப்பதற்காகச் சங்குகள் ஒலிக்கின்ற. அடிகள் - திருவடிகளை.

    ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 2அன்னங்கள் சிலவற்றைக் குறித்து, “குற்றம் செய்யாதார் யாவர்” என்பார் முன்பாகத் தனியிடத்திலே என் இடையாட்டத்தை அறிவியுங்கோள் என்கிறாள்.

 

1. “திருமேனி” என்றதன்பின் “அடிகள்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘வேறு ஒன்று’ என்று தொடங்கி.

2. “அன்னங்காள்! திறம் கூறுமின் வேறுகொண்டு” என்றதனைக் கடாக்ஷித்து
   அவதாரிகை அருளிச்செய்கிறார். “வேறுகொண்டு” என்கிறதிலே
   நோக்காகத் ‘தனியிடத்திலே’ என்கிறார்.