முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
461

என

என் பக்கலிலே கிருபைபண்ணி அருளவேணும். 1நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! 2என் அன்புக்கு இரை இடப் பாராய்!!

(2)

654.

வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன் னடிசேர அடியேற்கு ஆஆ என்னாயே.

   
பொ-ரை :- கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேகவண்ணா! ஆச்சரியத்தையுடைய அம்மானே! மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும் பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே! உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கியருள்வாய்.

    வி-கு :- மருள்கொள் வண்ணம் என்க. “ஆஆ” என்பது, இரக்கக் குறிப்பு. என்னாய் என்பது, விதிவினை; இரங்கி யருளவேண்டும்.

    ஈடு :-
மூன்றாம்பாட்டு. 3“அருளாய்” என்றீர்; இங்ஙனே நினைத்தபோதாக அருளப்போமோ? என்ன : வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞாரலாபத்தைப்பண்ணித் தந்த உனக்கு, பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? என்கிறார். என்றது, என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ என்றபடி.

 

1. “திருவேங்கடத்தானே” என்றதனோடே கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘நீ திருமலையிலே’ என்று தொடங்கி.

2. “ஆறாஅன்பில்” என்றதனோடே கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘என் அன்புக்கு’ என்று தொடங்கி.

3. “எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
  அவதாரிகை அருளிச்செய்கிறார், அதனை விவரணம் செய்கிறார்
  ‘என்னால் வந்த’ என்று தொடங்கி.