முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
472

திருவடிகள் என்னுதல். பூவோடு ஒத்த திருவடிகள் என்னுதல். அருவினையேன் - 1அவன் தடைகளைப் போக்கவல்லனாயிருப்பது, எனக்கு ஆசை கரைபுரண்டு இருப்பது, திருவடிகள் எல்லை இல்லாத இனியபொருளாக இருப்பது; இங்ஙனே இருக்கச்செய்தே, கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன். பொருந்துமாறு புணராயே - 2அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப்போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது; புணராய் - உன்னைக்கிட்டும் வழி கல்பிக்கவேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்யவேணும் என்னுதல்.

(4)

656

    புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
    புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
    திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
    திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.

   
பொ-ரை :- சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மைபொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?

    வி-கு :- வலவன் - வல்லவன்; எய்தவன் என்க. திணர் - திண்ணம். சார்ங்கம் - வில். ஓகாரங்கள் சேரப் பெறாததால் உண்டான துக்கத்தின் மிகுதியைக் காட்டுகின்றன.

    ஈடு :- ஐந்தாம்பாட்டு. 3நீர் இங்ஙனம் விரைகிறது என்? உம்முடைய அபேக்ஷிதம் செய்கிறோம் என்ன, அது என்று? என்கிறார்.

 

1. மேலேயுள்ள தொடர்களையும் கூட்டிக்கொண்டு பாவம் அருளிச்செய்கிறார்
  ‘அவன்’ என்று தொடங்கி. “ஆறா அன்பில் அடியேன்” என்று மேல்
  திருப்பாசுரத்தில் வந்துள்ளதனைத் திருவுள்ளம்பற்றி ‘எனக்கு ஆசை
  கரைபுரண்டிருப்பது’ என்கிறார்.

2. “பொருந்துமாறு” என்கையாலே, முன்பு கூடி இருந்து பிரிந்தவர் போலே
  இருக்கிறார் என்கிறார் ‘அசோகவனத்திலே’ என்று தொடங்கி.

3. “எந்நாள்” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.