659
659.
நோலா தாற்றேன்
உனபாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும்
நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார்
பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய்மயக்கி
அடியேன் பால் வந்தாய் போலே வாராயே.
பொ-ரை :- உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும்
செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும் விஷம்பொருந்திய
கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள், சேல்போன்ற
கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில்
எழுந்தருளியிருக்கின்றவனே! எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும்
வரவேண்டும்.
வி-கு :-
நோலாது ஆற்றேன் உன பாதம் காண” என்பது,
“நீலார் கண்டத்தம்மான்” முதலாயினோர்கட்கு அடைமொழி. அம்மானும் நான் முகனும் இந்திரனும்
பலர்சூழ விரும்பும் திருவேங்கடம் என்க. மால் - கருமை; ஈண்டு, கரிய நிறத்தையுடைய கிருஷ்ணனுக்காயிற்று.
மாலாய் வந்தாய்போலே அடியேன்பால் வாராய் என்க. வாராய்; விதிவினை.
ஈடு :-
எட்டாம்பாட்டு. 1‘உன்னைச்சேர்தற்கு
என் தலையில் ஒரு சாதனம் இல்லை’ என்னாநின்றீர்; ‘இது ஒரு வார்த்தையோ! சாதனத்தைச் செய்தார்க்கு
அன்றிப் பலம் உண்டோ?’ என்ன, ‘அவர் அவர்களுடைய விருப்பங்களைப் பெறுதல், சாதன அநுஷ்டானத்தாலே
என்றிருக்கும் பிரமன் முதலாயினோர்களுக்கும், கிட்டினால் பாசுரம் இதுவே அன்றோ?’ என்கிறார்.
தந்தாமுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிடுமத்தனைபோக்கி, ஒரு சாதனத்தைச் செய்து பெறலாம்படியோ நீ
இருக்கிறது?
நோலாது ஆற்றேன்
உனபாதம் காண என்று நுண் உணர்வின் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
விரும்பும்
1. “நோலாது ஆற்றேன்” என்பது போன்றவைகளால், தங்கள் வெறுமையை
முன்னிடுகிற பிரமன் முதலாயினோர்களுடைய
பாசுரத்தை
அருளிச்செய்வதற்குத் தகுதியாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘பாசுரம் இதுவே அன்றோ’
என்றது, தாம் அருளிச்செய்த “உனபாதம்
காண நோலாதாற்றேன்” என்றதனை. இதனால் என்சொல்லியவாறோ?
எனின், அதனை அருளிச்செய்கிறார் ‘தந்தாமுடைய’ என்று தொடங்கி.
|