முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
488

நினைக்கிறது, 1“அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை” எனகிற தேசத்தே சென்று அநுபவிக்கும் அநுபவத்தை இங்கே அநுபவிக்கக் காணும் நினைவு. அந்தோ - 2போக்கியமும் குறைவற்று, அவன்தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க, கிட்டி அநுபவிக்கப்பெறாது ஒழிவதே என்கிறார். அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே - 3என் சொரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்திபண்ணாய். 4காணாநிற்கச்செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.

(9)

661.

அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

   
பொ-ரை :- சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே! மூன்று உலகங்களையுமுடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்தியசூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! வேறுகதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.

    வி-கு :- அலர்மேல் மங்கை இறையும் அகலகில்லேன் என்று உறை மார்பா என்க. அலர்மேல் மங்கை - தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார். அமரர் - தேவர்களுமாம்.

 

1. “ந கால: தத்ரவை ப்ரபு:”

2. “நாற்றோளமுதே, திருவேங்கடத்தானே” என்பனவற்றைத்
  திருவுள்ளம்பற்றி, பாவம் அருளிச்செய்கிறார் ‘போக்கியமும்’ என்று
  தொடங்கி. போக்கியம் - இனிமை.

3. “அடியேன்” என்று கூறி வைத்து, “உனபாதம் அகலகில்லேன்”
  என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘என் சொரூபத்தை’ என்று
  தொடங்கி. ‘என் சொரூபம்’ என்றது, தமக்கு வேறுகதி இல்லாமையை
  என்றபடி. புத்திபண்ணாய் - கிருபைசெய்தருளவேண்டும்.

4. “இறையும்” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘காணா
  நிற்கச்செய்தே’ என்று தொடங்கி.