முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
57

New Page 1

    பொ-ரை :- ஒளிபொருந்திய பூணுநூல் சேர்ந்த வாமனனாகி, அகன்ற உலகத்தையெல்லாம் கொண்ட கொடிய கள்வனாகிய சர்வேசுவரனுடைய திருவடிகளின்மேலே, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அருளிச் செய்யப்பட்ட பண்களோடு கூடிய ஆயிரம் திருப்பாசுரங்களுள், இனிமையைக் கொண்ட பாசுரங்களாகிய இவைபத்தும் திருவண்வண்டூர்க்கு ஆம்; இவற்றை வல்லார் மின்னல்போன்ற இடையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவர் ஆவர்.

    வி-கு :
சடகோபன் சொன்ன இன்கொள் பாடல் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு; (இவை) வல்லார் மின்னிடை மடவார்க்கு மதனர் என்க. குறளாய் ஞாலம் கொண்ட கள்வன் என்க.

    ஈடு : முடிவில், 1இத்திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் இனிய பொருளாயிருக்குமாறுபோலே, சர்வேசுவரனுக்கு விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.

    மின்கொள் சேர் புரிநூல் குறளாய்-மின்னைவென்று, நீலநிறம் பொருந்திய திருமேனிக்குப் 2பரபாகமான சேர்த்தியையுடைய பூணுநூலைத் தரித்த ஸ்ரீவாமனனாய். 3இப்போது இது சொல்லுகிறது, மஹாபலி எல்லாச் செல்வத்தையும் கொடுக்கும்படி பணிவுள்ள வேஷத்தோடே போய்ப் புக்க படியைத் தெரிவிப்பதற்கு. 4“பகற்கண்டேன்” என்கிற தோற்றரவுக்குக் கிழக்கு வெளுக்கிறபடி. தூது விடுகைக்குக்கூடச் சக்தன் அல்லாமை தோற்ற இரப்பாளனாய்,

 

1. “இவை பத்தும் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கு” என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. பரபாகம் - பலநிறங்கள் கலக்கும்போது உண்டாகும் நிறவேறுபாடு.

3. மஹாபலி பக்கலிலே அகல் ஞாலம் கொள்ளச் செல்லும் இடத்தில்
  பூணுநூலை அருளிச்செய்வதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘இப்போது’
  என்று தொடங்கி. என்றது, மஹாபலியினுடைய சர்வசொத்தையும் கவர்ந்தது
  போன்று, இவளுடைய சர்வசொத்தையும் கவர்தற்கு அவன் புக்க படி
  என்பதனைத் தெரிவித்தற்கு என்றபடி.

4. அடுத்த திருவாய்மொழி “மின்னிடை மடவாராக” இருக்க, இங்கே,
  வாமனனைச் சொல்லுதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘பகற் கண்டேன்’
  என்று தொடங்கி. என்றது, “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்
  தோற்றரவுக்குத் தொடங்கிய படியைச் சொல்லுகிறது என்றபடி.

5. “மின்கொள் சேர் புரி நூல் குறளாய்” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘தூதுவிடுகைக்கும்’ என்று தொடங்கி. சிறாம்புதல் -
  சங்கோசம்.