முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
8

என

என்றவள் நிலையன்றோ இவளது. 1“பெரிய ஆபத்து நேர்ந்த காலத்தில் பகவானாகிய ஹரி நினைக்கத் தகுந்தவர் என்று மஹாத்மாவான வசிஷ்டர் கூறியது என்னால் அறியப்பட்டது” 2போலி ரக்ஷகரான கணவன்மார்களாலும் தன்னாலும் நோக்கிக்கொள்ள ஒண்ணாதபடி அவ்வருகுபட்ட ஆபத்து அன்றோ. பகவான்-பூர்ணரன்றோ! ஆபூர்ணர் காரியம் செய்யவல்லார் என்று காணும் அவன் நினைவு. ‘ஹரி:’ - அடியார்களுடைய பகைவர்களை அழித்தலையே இயல்பாகவுடையவனைப் பற்றினாள். 3ஞானம் முதலான குணங்களால் சொன்ன பூர்த்தியிலே சக்தியுமுண்டாயிருக்கச்செய்தே, ஹரி: என்று விசேடிக்கவேண்டிற்று, அல்லாதார்க்கும் இக் குணம் ஓர் ஒருகால் உண்டாகையாலே; இவனுக்கு அங்ஙன் அன்று; இது இயல்பு என்கைக்காக எடுத்தது. 

553.

        வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
        செய்கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூ ருறையும்
        கைகொள் சக்கரத்தென் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
        கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

   
பொழிப்புரை :- அழகிய உப்பங்கழிகளிலே நாடோறும் வந்து மேய்கின்ற கூட்டமான குருகுகளே! வயல்களிலே நிறைந்திருக்கின்ற செந்நெற் பயிர்கள் ஓங்கி வளர்கின்ற திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற, திருக்கரத்திலே கொண்டிருக்கின்ற சக்கரத்தையும் கோவைக்கனிபோன்ற வாயினையுமுடைய எம்பெருமானைக் கண்டு வினையேனுடைய காதலின் தன்மையைக் கைகளைக்கூப்பி வணங்கிச் சொல்லுங்கோள்.

 

1. திரௌபதி எல்லாவற்றையும் விட்டு ‘அவனே ரக்ஷகன்’ என்று இருந்தாளோ?
  என்ன, ‘பெரிய ஆபத்து’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

 
“ஜ்ஞாதம் மயா வஸிஷ்டோ புரா கீதம் மஹாத்மநா
   மஹதி ஆபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்ய: பகவாந் ஹரி:”

  என்பது, பாரதம் உத்யோகபர்வம்.

2. சுலோகத்திலேயுள்ள “மஹதி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘போலி ரக்ஷகரான’ என்று தொடங்கி. ‘அவன்’ என்றது, முனிவரை.

3. “ஹரி:” என்றால், பகைவர்களை அழிக்கின்றவன் என்பதனை மாத்திரம்
   காட்டுமே ஒழிய, அதன் தன்மையைக் காட்டுமோ? என்ன, ‘ஞானம்
   முதலான’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.