முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

மூன்றாந்திருவாய்மொழி - பா. 8

143

‘ஆனால், செய்யப் பாரத்தது என்?’ என்னில், என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன். 1‘நான் இப்பொழுதே இலக்குமணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே, ‘நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

(7)

                   692 

        கண்டது வேகொண்டுஎல் லாரும்கூடிக்
             கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்
        கொண்டலர் தூற்றிற் றதுமுதலாக்
             கொண்டஎன் காதல் உரைக்கில்தோழீ!
        மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்
             நீள்வீசும் புங்கழி யப்பெரிதால்;
        தெண்திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
             தென்திருப் பேரெயில் சேர்வன்சென்றே.

   
பொ - ரை : ‘என் சரீரத்தில் கண்ட வேறுபாடு முதலியவற்றைக் கொண்டு, எல்லோரும் கூட்டம் கூடிக் கரிய கடல் வண்ணனோடு கூடியதால் என்னிடத்திலுண்டான வேறுபாட்டினைக் காரணமாக்கொண்டு பழிச்சொற்கள் கூறிய அதனையே காரணமாகக் கொண்டு வளர்ந்த என்னுடைய காதலை உரைக்குமிடத்து, தோழியே! அணுக்கள் செறிந்திருக்கின்ற இந்த உலகத்தையும், இதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களையும், இவற்றை எல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கின்ற ஆகாசத்தையும்விட மிகமிகப் பெரியதாகும்; தெளிந்த அலைகளையுடைய தண்ணீரானது சூழ. அவன் எழுந்தருளியிருக்கின்ற தென்திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்திற்குச் சென்று சேர்வேன்,’ என்கிறான்.

    வி - கு :
‘கொண்டு கூடி என் திறத்துக்கொண்டு அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட காதல்’ என்க. தூற்றிற்றது - தூற்றியது. முதல் - காரணம். சூழ்ந்த - சூழ -எச்சத்திரிபு. ‘சூழ இருந்த திருப்பேரெயில்’ என்க.

_____________________________________________________________

1. இச்சுலோகத்தை இத்திருப்பாசுரத்தின் முன்னுரையில் காண்க. பக். 140.