முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இடத

நான்காந்திருவாய்மொழி - பா. 1

163

இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ? 1பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ? 2துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

___________________________________________________________________

1. ‘அச்சத்திற்கு இடம் அல்லாத இடத்திலும் அச்சங்கொள்ளுதற்குக் காரணம் என்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பயசங்கை’ என்று தொடங்கி.

2. அவனுடைய வைலக்ஷண்யத்தைக் கண்டு இடமல்லாத இடத்திலும் அஞ்சினதற்கு
  உதாரணம் காட்டுகிறார், ‘துரியோனன்’ என்று தொடங்கி. தடவிப் பார்த்ததற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘மஹாபுத்திமானான’ என்று தொடங்கி.

        ‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’

  என்பது, பாரதம், உத்யோக. ‘மஹாமதி:’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘கடல்
  கலங்குவது’ என்று தொடங்கி.

3. ‘பேரன்பாலே கலங்குவதற்குக் காரணம் தெளிந்த ஞானமே,’ என்னுமதனை ஆப்த
  சம்வாதத்தாலே தெரிவிக்கிறார், ‘பிள்ளையுறங்காவில்லி தாசர்’ என்று தொடங்கி.
  பிள்ளையுறங்காவில்லிதாசர் என்பவர், எம்பெருமானாருடைய மாணாக்கர்.

4. ‘இந்தத் தன்மை அவர்க்கும் உண்டு’ என்கிறார், ‘பிள்ளைதாம்’ என்று தொடங்கி.
  பிள்ளைதாம்-பிள்ளையுறங்கா வில்லிதாசர்தாம். சொட்டை-வாள்.

5. ‘’மஹாமதி:’ என்பது, அறிவுகேடர் என்பதனைக் காட்டுமோ?’ என்ன,
  ‘அறிவுண்டாகையாவது’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.