முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

நான்காந்திருவாய்மொழி - பா. 5

175

    வி-கு : ஆண்-ஆண் தன்மை. ஏண்-வலியுமாம். கையறை-அணிவகுத்தல்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1பாரதப் போர்ச் செயலை அருளிச்செய்கிறார்.

    ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி - 2ஏற்றிலக்கை பெற்று உண்கிற மிடுக்கையுடையரான துரியோதனன் சேனை தேர்க்காலிலே நெரிந்த ஓசை. மல் என்பது மிடுக்கு; ‘மிடுக்கையுடைய சேனை’ என்றபடி. அன்றிக்கே, ‘மல்லர்க்கு மிடுக்கு உண்டாகைக்காக மது மாமிசங்களை உண்பித்து ஆட்டத்து வெளியிலே நிறுத்தினான் ஆயிற்று நலிகைக்காக: அதனை அறிந்து பையல்களைத் தேர்காற்கீழே இட்டு நெரித்த ஓசை’ என்னுதல். வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து, ‘ததர்ந்த’ என்கிறார்காணும், 3பசளைக்கலம் நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்தபடியைப் பற்ற. மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி - அரசர்களுடைய ஆண் பிள்ளைத்தனத்தையுடைத்தான சேனை ‘கிருஷ்ணன் சாரதியாக ஏறினான்’ என்று கேட்ட வாறே ‘நாம் முடிந்தோம் அன்றோ?’ என்று அவ்வளவில் குடல் குழம்பிக் கூப்பிட்ட ஒலி. 4ஆண் பிள்ளைகளான வீடுமன் துரோணன் முதலாயினோர்கள் அன்றோ தூசி ஏறின பேர்?

    விண்ணுள் ஏணுடைத்தேவர் வெளிப்பட்ட ஒலி - 5சர்வேஸ்வரனோடு ஒக்க இன்னார் இன்னார் என்னும்படி தங்கள் தங்களைச் சமையவிட்டுக்கொண்டு செருக்கினையுடைவர்களாய் ஒரோ இருப்பிடங்களையுடையவர்களாய் இருக்கிற தேவர்களின் கூட்டம்

______________________________________________________________________

1. ஈற்றடியைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘மல்லர்’ என்பதற்கு ‘மிடுக்கையுடையவர்கள்’ என்பதும் ‘வீரர்கள்’ என்பதும்
  இரண்டு பொருள். இவ்விரண்டு பொருளையும் முறையே அருளிச்செய்கிறார்,
  ‘ஏற்றிலக்கை’ என்று தொடங்கியும், ‘மல்லர்க்கு’ என்று தொடங்கியும், ஏற்றிலக்கை
  -உயர்ந்த சம்பளம். ஆட்டத்து வெளி-வையாளி விடுகிற வெளி.

3. பசளைக்கலம்-பச்சைப்பானை.

4. ‘‘ஆணுடை’ என்றது யாரை?ய என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘ஆண்
  பிள்ளைகளான’ என்று தொடங்கி. தூசி-முன்னணி.

5. ‘ஏண்’ என்றதற்கு, ‘உயர்வு’ என்பதும், ‘எண்ணுதல்’ என்பதும் இரண்டு பொருள்.
  அவ்விரண்டு பொருளையும் அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரனோடு’ என்று
  தொடங்கியும், ‘அவன் பிரமன்’ என்று தொடங்கியும். சமையவிட்டுக்கொண்டு -
  புண்ணிய விசேடத்தாலே ஆக்கிக்கொண்டு. என்றது, ‘உயர்ந்தவராகச்
  செய்துகொண்டு’ என்றபடி.