முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

20

திருவாய்மொழி - ஏழாம் பத்து

கையும் நீயுமாயன்றோ நோக்குவது? 1‘அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்,’ என்னக்கடவதன்றோ? 2உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது? விளங்காநின்றுள்ள திருவாழி. வினையேனுடை வேதியனே - 3‘தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்’ என்றும், ‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்றும் சொல்லுகிறபடியே, ஊர்ப்பொதுவாயிருக்கிற நீ. என்னளவிலே வந்தவாறே வேதங்களாலேயே அறியப்படுகின்றவனானாய். 4இன்று இருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைச் செய்வதே நான்!

(2)

                     665 

        வேதி யாநிற்கும் ஐவ ரால்வினை
             யேனை மோதுவித்து உன்தி ருவடிச்
        சாதி யாவகை நீதடுத்து
             என்பெறுதி! அந்தோ!
        ஆதி யாகி அகலி டம்ப டைத்துண்
             டுமிழ்ந்து கடந்திடந் திட்ட
        சோதி நீள்முடி யாய்!தொண்ட
             னேன்மது சூதனனே!


   
பொ-ரை : உலகத்திற்கு எல்லாம் காரணனாகி அகன்ற இந்த உலகத்தைப் படைத்துப் பிரளய காலத்தில் உண்டு, அது நீங்கியவுடனே உமிழ்ந்து, திரிவிக்கிரமனாகி உலகத்தை எல்லாம் அளந்து. வராஹ அவதாரமாகி இடந்துகொண்டு வந்த சோதி நீள்முடியாய்! அடிமைப்பட்டவனான என்னுடைய விரோதிகளை அழிக்கவல்லவனே! நலியாநிற்கும் ஐந்து இந்திரியங்களால், தீவினையேனாகிய என்னைத் தாக்கி உன் திருவடியை நான் சாராதபடி தடுத்து நீ என்ன பயனைப் பெறப்போகின்றாய்! ஐயோ!

_____________________________________________________________

1. சக்கரங்கொண்டு உலகத்தைக் காப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘அருளார்’ என்று தொடங்கி. இது, திருவிருத்தம், 33.

2. ‘மின்னு’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘உருவின வாள்’ என்று
  தொடங்கி.

3. ‘கடல் ஞாலம் காக்கின்ற’ என்றதனைக் கடாட்சித்து, ‘வினையேனுடைய
  வேதியனே’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘தேவர்களுக்கும்’
  என்று தொடங்கி.

        ‘தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்’

என்பது, ஜிதந்தா. 1 : 2. ‘பொதுநின்ற பொன்னங்குழல்’ என்பது, மூன்றாந்திருவந். 88. 

4. ‘வினையேன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இன்று இருந்து’
  என்று தொடங்கி.