முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அடல

28

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    அடல் ஆழி ஏந்தி அசுரர் வன்குலம் மருங்கு வேர் அறுத்தாய் - போரிலே முயற்சியையுடைய திருவாழியை ஏந்தி அசுரருடைய வலிதான குலத்தைப் பக்கவேரோடு வாங்கினவனே! 1‘அந்த வாசனையௌ உம்மை நலிகிறது? பின்னையும் நலிகிறது உண்டோ?’ என்ன, விண்ணுளார் பெருமானேயோ- 2ஒருவன் சிறை இருக்க, தாயும் தந்தையும் உடன் பிறந்தார்களுமாய்க் கலியாணம் செய்யக்கண்டு தான் கூடப் பெறாதே நோவுபடுமாறு போலே நித்தியசூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரமபதத்திலே இருக்கிறபடியே நினைத்து அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். 3‘ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே, பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார். 

                    668 

        விண்ணுளார் பெருமாற் கடிமைசெய்
             வாரை யும்செறும் ஐம்பு லனிவை
        மண்ணுள் என் னைப்பெற்றால் என்செய்யா
             மற்று நீயும் விட்டால்?
        பண்ணு ளாய்!கவி தன்னுளாய்!
             பத்தியி னுள்ளாய்! பரமீசனே! வந்தென்
        கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!
             ஒன்று சொல்லாயே.

 

1.‘அந்த வாசனையோ?’ என்றது, ‘விரோதிகளை அழித்தது மாத்திரமேயோ
  உம்மை நலிகிறது?’ என்றபடி.

2. ‘பெருமானையோ’ என்றதிலுள்ள ‘ஓ’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘ஒருவன்’ என்று தொடங்கி, ‘பெருமானே!’ என்பது விளிப்பெயர்.

3. அதனைத் திருஷ்டாந்த மூலம் விரிக்கிறார், ‘ஹா ராம’ என்று தொடங்கி.

        ‘ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸூமித்ரே
         ஹா ராமமாத: ஸஹமே ஜநந்யா’

என்பது, ஸ்ரீராம. சுந். 28:8.

        ‘நிருதாதியர் வேரற நீண்முகில்போல்
        சரதாரைகள் வீசினர் சார்கிலிரோ?
        வரதா! இளை யோய்! மறு வேதுமிலாப்
        பரதா! இளை யோய்! பழி பூணுதிரோ?’

என்பது, கம்ப, சடாயு உயிர் நீத்த பட. 79.