முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அவ

296

திருவாய்மொழி - ஏழாம் பத்து

அவ்வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு. 1அப்போதை முடைநாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய். ‘நீ காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என, எனது ஆவியுள்ளே - என் மனதிற்குள்ளே. மாட்டிய - ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல், வல் விளக்கின் சுடராய்-விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று. 2‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒரு தமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர். நிற்கும் வாலியதே - வலிதாய் நின்று நலியாநிற்கும். 3‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது? இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது: பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

(2)

                  731

        வாலிய தோர்கனி கொல்?வினை
             யாட்டியேன் வல்வினைகொல்?
        கோலம் திரள்பவ ளக்கொழுந்
             துண்டங்கொ லோஅறியேன்
        நீல நெடுமுகில் போல்திரு
             மேனியம் மான்தொண்டைவாய்
        ஏலும் திசையுள்எல் லாம்வந்து
             தோன்றும்என் இன்உயிர்க்கே.

   
பொ-ரை : நீல நிறம் பொருந்திய பெரிய முகில் போன்ற திருமேனியையுடைய அம்மானது கொவ்வைக்கனி போன்ற திரு அதரமானது, தூய்மையையுடையதான ஒப்பற்ற பழநீதானோ? தீவினையேனாகிய என்னுடைய கொடிய தீவினைதானோ? அழகிய திரண்ட பவளத்தினது கொழுவிய துண்டுதானோ? அறியேன்; தப்புவதற்குத் தகுதியான திக்குகளில் எல்லாம் எனது இனிய உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்கு வந்து தோன்றாநின்றது.

_______________________________________________________________

1. ‘முடை நாற்றம் இப்போது தோற்றுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அப்போதை’ என்று தொடங்கி.

2. ‘மாட்டிய’ என்பதற்கு, ‘ஏற்றிய’ என்று பொருள் அருளிச்செய்ததற்குச்
  சம்வாதம் காட்டுகிறார், ‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று தொடங்கி.

3. ‘வல்விளக்கு’ என்றும், ‘வாலியது’ என்றும் சொன்னதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘விளக்காகிறதுதான்’ என்று தொடங்கி.