முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

745

எட்டாந்திருவாய்மொழி - பா. 6

333

                        745 

        மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
        அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
        வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
        1துயக்கா நீநின்ற வாறுஇவை என்ன துயரங்களே.

    பொ - ரை : ‘மயக்குகின்றவனே! வாமனனே! நான் தெளியும்படி ஒன்று அருளிச்செய்ய வேண்டும்; மறப்பு ஆகித் தெளிவு ஆகி வெப்பமாகிக் குளிர்ச்சியாகி ஆச்சரியமாகி ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி வெற்றிகளுமாகி இரு வினைகளாகி இருவினைப் பயன்களுமாகி அதற்கு மேலே உன்னை அடைந்த அடியவர்களும் மதி மயங்கும்படி நீ செய்துகொண்டு நின்ற விதம் எங்களுக்குத் துக்கத்தைத் தருகின்றனவாய் இராநின்றன, ‘என்றவாறு.

    ஈடு : ஆறாம் பாட்டு. 2மறதி தொடக்கமான மாறுபட்ட பொருள்களை விபூதியாக உடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

    மயக்கா-இன்னார் என்று இன்றிக்கே, யாரேனுமாகக் கிட்டினாரை மயங்கச் செய்யுமவனே! ‘அது எங்கே கண்டோம்?’ என்னில், வாமனனே - காரியம் செய்யப்போந்த நீ, அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன் கையிலே நீரை வார்த்துத் தானே இசைந்து தரும்படி மயங்கச் செய்தவனே! 3‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’ என்கிறபடியே. மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் - அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமை இல்லாமல் மயங்கச் செய்யாதே, நான் தெளிவையுடையேனாம்படி செய்தருளவேணும். அயர்ப்பாயத் தேற்றமுமாய் - 4‘நினைவும் ஞானமும் மறப்பும் என்னிடமிருந்து உண்டாயின’

______________________________________________________________

1. ‘துயக்காய்’ என்பதும் பாடம்.

2. பின் மூன்று அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. மகாபலியை மயங்கச் செய்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘மன்னை’
  என்று தொடங்கி. இது. பெரிய திருமடல், 109.

4. ‘மறப்பும் தெளிவும் அவனாகக் கூடுமோ?’ என்ன, ‘கூடும்’ என்பதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘நினைவும்’ என்று தொடங்கி.

        ‘ஸர்வஸ்யச அஹம் ஹ்ருதி ஸந்நி விஷ்ட:
         மத்த: ஸ்மிருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச’

என்பது, ஸ்ரீகீதை, 15 : 15.