முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

334

திருவாய்மொழி - ஏழாம் பத்து

என்றான் அன்றோ தானே, மறதியும் தெளிவுமாய்? 1இவ்விடத்தில் மாறுபட்ட தன்மையைச் சொல்லுகிறது அன்று, விசித்திரமான தன்மையைச் சொல்லுகிறது. அழலாய்க் குளிராய்-சீத உஷ்ணங்களாய். வியவாய் வியப்பாய் - ஆச்சரியமும் ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி. வென்றிகளாய் - வெற்றிகளாய். வினையாய்ப் பயனாய் - புண்ணிய பாப கர்மங்களாய் அவற்றினுடைய பலங்களுமாகி. பின்னும் நீ துயக்கா - அதற்கு மேலே, உன்னை அடைந்தவர்களும் மதி கலங்கும்படி, அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவற்றை உண்டாக்கி. நீ நின்றவாறு - நீ நின்ற பரிகாரம். இவை என்ன துயரங்களே - 2உனக்கு இவற்றில் அருமை இன்றியே விளையாட்டாய் இராநின்றது; எங்களுக்கு அவைதாம் துக்கத்தைக் கொடுக்கக் கூடியவையாய் இராநின்றன.

(6)

                 746

        துயரங்கள் செய்யும்கண் ணா!சுடர்
             நீள்முடி யாய்!அருளாய்
        துயரஞ்செய் மானங்க ளாய்மத
             னாகி உகவைகளாய்த்
        துயரஞ்செய் காமங்க ளாய்த்துலை
             யாய்நிலை யாய்நடையாய்த்
        துயரங்கள் செய்துவைத் தி;இவை
             என்னசுண் டாயங்களே.

   
பொ-ரை : துன்பங்களைச் செய்கின்ற கண்ணனே! பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியையுடையவனே! துன்பங்களைச் செய்கிற சாதி முதலானவை பற்றி வருகின்ற மானங்களாகியும், செருக்காகியும், மகிழ்ச்சிகளாகியும், துன்பங்களைச் செய்கின்ற காமங்களாகியும், அளவாகியும், நிற்றலாகியும், நடத்தலாகியும் துன்பங்களைச் செய்து வைத்தாய்; இவை என்ன சுயநலக்காரிங்கள்? அருளிச்செய்ய வேண்டும்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 3துக்கத்திற்குக் காரணமான அபிமானம் தொடக்கமான விசித்திரமான பொருள்களை விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

_____________________________________________________________

1. ‘நல்குரவும்’ என்ற திருவாய்மொழியிற்கூறிய பொருள் போலே இருத்தலின்,
  ‘அது அன்று’ என்று பரிகரிக்கிறார், ‘இவ்விடத்தில்’ என்று தொடங்கி.

2. ‘இவை என்ன துயரங்களே?’ என்றதனால் பலித்த பொருளை
  அருளிச்செய்கிறார், ‘உனக்கு’ என்று தொடங்கி.

3. பின் மூன்று அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.