முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இன

340

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இன்றிக்கே, இருந்தாகளாகிலும், அவர்கள் ஒன்றைச்சொன்னால், ‘ஸ்ரீவைகுண்டத்திலே நித்தியசூரிகள் நடுவே அவர்களுக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்றிக்கே இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே, இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.

(10)

              750

        ஆம்வண்ணம் இன்னது ஒன்றுஎன்று
             அறிவது அரியஅரியை
        ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட
             கோபன் அறிந்துஉரை த்த
        ஆம்வண்ண ஒண்தமிழ் கள்இவை
             ஆயிரத் துள்இப்பத்தும்
        ஆம்வண்ணத் தால்உரைப் பார்அமைந்
             தார்தமக்கு என்றைக்குமே.

   
பொ - ரை : ‘உண்டான பிரகாரம் இன்னபடிப்பட்டது ஒன்று,’ என்று அறிதற்கு அரிய சர்வேஸ்வரனை, ஆகின்ற தகுதியால் திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அறிந்து அருளிச்செய்த பொருந்திய ஓசையையுடைய அழகிய தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் தங்களுக்குத் தகுந்த முறையால் சொல்ல வல்லவர்கள், தாங்கள் என்றைக்கும் ஈஸ்வரனுடைந அனுபவத்துக்குச் சமைந்தார்கள் ஆவார்கள்.

    ஈடு : முடிவில், 1‘அங்குத்தைக்குத் தகுதியாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் திருவாய்மொழிகளிலும் தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

    ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை -இன்னபடிப்பட்டது ஒரு தன்மையையுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று. 2‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே, வேதங்களும்

________________________________________________

1. பின் மூன்று அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. அப்படி அறியப் போகாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘அந்த’ என்று தொடங்கி.

        ‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’

என்பது, தைத்திரீய. ஆனந். 9 : 1.